அமெரிக்காவில் அதி நீண்ட அரச சேவை முடக்கம்

Trump

அமெரிக்காவில் தற்போது மத்திய அரச சேவைகளின் ஒரு பகுதி முடக்கத்தில் உள்ளது. ரம்ப் தனது விருப்பப்படி மெக்ஸிகோ எல்லையோரம் வேலி அமைக்க அமெரிக்க காங்கிரஸிடம் பணம் கேட்டிருந்தார். காங்கிரஸ் தேவையான பணத்தை வழங்க மறுத்ததன் காரணமாக ரம்ப் வரவுசெலவு திட்டங்களில் கையொப்பமிட மறுத்ததனாலேயே இந்த பகுதி முடக்கம் இடம்பெறுகிறது.
.
ஜனாதிபதி தேர்தலின் போது தான் மெக்ஸிகோ எல்லையோரம் வேலி போடுவேன் என்றும், அதற்கு மெக்ஸிகோவே பணம் செலுத்தும் என்று ரம்ப் கூறியிருந்தார். ஆனால் மெக்ஸிகோ வேலிக்கு பணம் செலுத்த மறுத்துவிட்டது. அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன் வேலி வேலைகள் ஆரம்பிக்காதவிடத்து ஊடகங்களும், ஆதரவாளர்களும் ரம்பின் இயலாமையை சுட்டி காட்டலாம்.
.
வெள்ளிக்கிழமையுடன் தற்போதைய அரச சேவை முடக்கம் 21 நாட்களுக்கு நீடித்து உள்ளது. அத்துடன் இது தொடர்ந்து பல நாட்களுக்கு நீடிக்கும் என்பதால், இந்த அரச சேவை முடக்கமே அமெரிக்காவின் மிக நீண்ட அரச சேவை முடக்கமாக இருக்கும்.
.
தற்போதைய அரச சேவை முடக்க காலத்தில் சுமார் 800,000 ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படமாட்டாது. அமெரிக்காவில் இரண்டு கிழமைகளுக்கு ஒரு தடவை ஊதியம் வழங்கப்படுவதால், சுமார் 800,000 ஊழியர்கள் தமது ஊதியத்தை இம்முறை பெறவில்லை. இவர்களின் ஊதியம் பின்னர் கிடைக்குமாயினும், தற்போது இவர்களால் தமது செலவுகளை செய்ய முடியாது இருக்கும்.
.
அமெரிக்காவின் மிக நீண்ட அரச சேவைகள் முடக்கம்:
Dec 22, 2018 – Trump  – 21 நாட்கள் +
Dec 16, 1995 – Clinton – 21 நாட்கள்
Oct 1, 1978 – Carter – 17 நாட்கள்
Oct 1, 2013 – Obama -16 நாட்கள்
Oct 1, 1977 – Carter – 12 நாட்கள்
Oct 1, 1971 – Carter – 11 நாட்கள்
Oct 1, 1976 – Ford – 10 நாட்கள்
 .
Regan காலத்திலேயே அதிக தடவைகள் அரச சேவை முடக்கம் நிகழ்ந்துள்ளன. ஆனால் அவை சில நாட்களே நீடித்து உள்ளன. Regan காலத்தில் 8 தடவைகள் சேவை முடக்கம் இடம்பெற்று உள்ளன. அவற்றுள் 4 முடக்கங்கள் 1 நாளும், 2 முடக்கங்கள் 2 நாட்களும், 2 முடக்கங்கள் 3 நாட்களும் நீடித்து உள்ளன.

.