ஆப்கானிஸ்தானை நீங்கும் அமெரிக்க படைகள்

ஆப்கானிஸ்தானை நீங்கும் அமெரிக்க படைகள்

2001ம் ஆண்டு நியூ யார்க் நகரில் இடம்பெற்ற பயணிகள் விமான தாக்குதல்களின் பின் அல்கைடாவை அழிக்க ஆப்கானிஸ்தான் சென்ற அமெரிக்க படைகள் 20 ஆண்டுகளின் பின், வரும் செப்டம்பர் 11ம் திகதிக்கு முன், அங்கிருந்து வெளியேறவுள்ளன. இந்த செய்தி நாளை புதன் NATO அணி அமர்வில் அறிவிக்கப்படலாம்.

அமெரிக்க படைகள் அங்கு நிலைகொண்டுள்ள காலத்தில் தலபானை கட்டுப்படுத்த முடியாத ஆப்கானிஸ்தான் அரசு அமெரிக்கா வெளியேறிய பின் பெரிய நெருக்கடிகளுக்கு உள்ளாகலாம். தலபான் அங்கு மீண்டும் ஆட்சியை கைப்பற்றலாம்.

தற்போது அங்கு சுமார் 2,500 அமெரிக்க படையினரும், சிறிய அளவில் NATO அணியினரும் உள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 20 ஆண்டுகளில் அங்கு 2,200 க்கும் மேலான அமெரிக்க படையினர் பலியாகி இருந்தனர். அத்துடன் சுமார் 20,000 அமெரிக்க படையினர் காயமடைந்தும் உள்ளனர். அமெரிக்கா சில டிரில்லியன் டாலர் பணத்தையும் இங்கு செலவழித்து இருந்தது.

தலபானுடனான அமெரிக்காவின் நேரடி பேச்சுக்கள் அனைத்தும் தோல்வியில் முடிந்து இருந்தன. மேலும் ஒரு பேச்சு விரைவில் துருக்கியில் இடம்பெறவுள்ளது.

சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தானுள் நுழைந்து முழுமையான வெற்றி இன்றி, பலத்த இழப்புகளுடன் வெளியேறியது போலவே அமெரிக்காவும் விரும்பிய நோக்கங்கள் நிறைவேறாத நிலையில் வெளியேறுகிறது.