கியூபாவும் கம்யூனிசத்தை கைவிடுகிறது

கியூபாவும் கம்யூனிசத்தை கைவிடுகிறது

சோவியத் உட்பட பல சோஷலிச/கம்யூனிச நாடுகள் நீண்ட காலமாக முதலாளித்துவத்தை கடைபிடிக்க ஆரம்பித்து இருந்தும் கியூபா தொடர்ந்து கம்யூனிச வழியிலேயே இதுவரை இயங்கி வந்துள்ளது. ஆனால் தற்போது கியூபாவும் முதலாளித்துவத்தை மேலும் ஊக்குவிக்க ஆரம்பித்து உள்ளது. கடந்த சனிக்கிழமை இதற்கான அறிவிப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

இதுவரை காலமும் கியூபாவில் 127 துறைகளில் மட்டுமே சொந்த உரிமையுடன் பொதுமக்கள் வர்த்தகங்களை இயக்கலாம். அந்த துறைகள் முடி வெட்டுதல், வாகன சக்கரங்களை திருத்துதல், மரம் வெட்டல் போன்ற சிறு கைத்தொழில் போன்ற துறைகளே.

ஆனால் புதிய நடைமுறை சுமார் 2,000 துறைகளில் மக்கள் சொந்த நிறுவனங்களை அமைக்க வழி செய்யவுள்ளது. இது பல்லாயிரம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனாலும் 124 துறைகளில் பொதுமக்கள் தொடர்ந்தும் தனியார் நிறுவனங்களை அமைக்க முடியாது. அத்துறைகளில் அரச கூட்டுத்தாபனங்கள் தொடர்ந்தும் ஆதிக்கம் கொண்டிருக்கும். அந்த துறைகளை கொண்ட பட்டியல் இதுவரை அரசால் வெளியிடப்படவில்லை.

சீனாவிலும் தற்போது கம்யூனிசம் என்ற சொல் Chinese Communist Party என்ற கட்சி பெயரில் மட்டுமே உள்ளது. அதற்கு அப்பால், நடைமுறையில் சீனாவே தற்போது உலகின் மிகவும் பெரிய முதலாளித்துவ நாடு.

2016ம் ஆண்டு பிடல் காஸ்ரோவின் மரணத்தின் பின் பதவிக்கு வந்திருந்த சகோதரன் Raul Castro வரும் ஏப்ரல் மாதம் ஓய்வு பெறக்கூடும் என்றும் நம்பப்படுகிறது.