சந்திரனிலும் காணி பிடிப்பு வருகிறது?

சந்திரனிலும் காணி பிடிப்பு வருகிறது?

கடந்த செவ்வாய்க்கிழமை (2020/10/13) அமெரிக்கா தலைமையில் 8 நாடுகள் நாசாவின் Artemis Accord என்ற இணக்கம் ஒன்றில் ஒப்பந்தம் இட்டுள்ளன. கூட்டாளி நாடுகளான மேற்படி எட்டு நாடுகள் மட்டுமே செய்துகொண்ட இந்த இணக்கத்தை ஒரு சர்வதேச இணக்கம் ஆக அறிமுகம் செய்யவும் அவர்கள் முனைகின்றனர்.

அமெரிக்கா தலைமையில் அஸ்ரேலியா, பிரித்தானியா, கனடா, இத்தாலி, ஜப்பான், Luxembourg, UAE ஆகிய நாடுகளே மேற்படி இணக்கத்தில் கையொப்பம் இட்டுள்ள நாடுகள்.

அமெரிக்கா வரைந்த இந்த இணக்கம் சந்திரன் போன்ற பூமிக்கு அப்பாற்பட்ட இடங்களில் பூமியை தளமாக கொண்ட நாடுகள், தனியார் நிறுவனங்கள் ‘பாதுகாப்பு வலயம் – safety zones’ உருவாக்கி உரிமை கொண்டாடலாம் என்கிறது. இவர்கள் அமைக்கும் பாதுகாப்பு வலயங்களுக்கான உரிமை எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும் என்றும் கூறப்படவில்லை. அத்துடன் அங்கிருந்து கனியங்களை பொருளாதார நலன்களுக்கு எடுத்துவரலாம் என்றும் மறைமுகமாக கூறப்படுகிறது.

ஆனால் 1967 ஆம் ஆண்டு உலக நாடுகள் செய்துகொள்ளப்பட்ட Outer Space Treaty இணக்கப்படி பூமிக்கு அப்பால் இருந்து பொருளாதார நோக்கத்தில் எதையும் எடுத்துவர முடியாது. அத்துடன் சந்திரன் போன்ற இடங்களில் நிலங்களுக்கு உரிமை கொண்டாடவும் முடியாது. Outer Space Treaty யில் தற்போது 110 நாடுகள் ஒப்பமிட்டுள்ளன.

பொதுவாக யுத்தங்கள் மூலமே நாடுகள் பிடிக்கப்படும். ஆனால் சந்திரனில் இடம் பிடிக்கும் நோக்கில் யுத்தம் செய்ய எந்த நாட்டிடமும் போதிய படை இல்லை. அதனால் சந்திரனில் தோன்றும் முரண்பாடுகளுக்கு யுத்தம் பூமியில் இடம்பெறலாம்.