சர்வதேச வங்கிகள் திருட்டு பண கடத்தலுக்கு உதவின

சர்வதேச வங்கிகள் திருட்டு பண கடத்தலுக்கு உதவின

Deutsche Bank, HSBC, JPMorgan, Barclays போன்ற உலகின் பிரதான வங்கிகள் ஊழல், போதை விற்பனை, திருட்டு போன்ற வழிகள் மூலம் பெறப்படும் பணத்தை ஒரு நாட்டில் இருந்து இன்னோர் நாட்டுக்கு கடத்தும் வேலைகளுக்கு உண்மை தெரிந்தும் உதவின என்கிறது FinCEN (Financial Crime Enforcement Network) விசாரணைகள்.

2019 ஆம் ஆண்டு அமெரிக்காவின் BuzzFeed என்ற செய்தி நிறுவனம் அமெரிக்காவின் Department of the Treasury கொண்டிருந்த பெரும் தொகை (2,657 files) பண பரிமாற்ற தவுகளை இரகசியமாக பெற்று International Consortium of Investigative Journalist (ICIJ) என்ற விசாரணை அமைப்புக்கு வழங்கி இருந்தது.

தமக்கு கிடைத்த ஆவணங்களை 88 நாடுகளில் உள்ள 400 விசாரணை பத்திரிகையாளர் உதவியுடன் மேலும் விசாரணை செய்தது ICIJ. சுமார் $2 டிரில்லியன் பணம் சந்தேகத்துக்கு இடமான முறையில் நகர்ந்து உள்ளது என்கிறது ஆய்வுகள்.

2011 முதல் 2017 வரை ஜேர்மனியின் Deutsche Bank 982 சதேகத்துக்கு இடமான பணமாற்றங்களை செய்துள்ளது. அதேகாலத்தில் அமெரிக்காவின் Bank of New York Mellon 325 சதேகத்துக்கு இடமான பணமாற்றங்களை செய்துள்ளது. Standard and Chartered Bank, JPMorgan Chase, Barclays, HSBC ஆகிய வங்கிகள் முறையே 232, 107, 104, 73  சதேகத்துக்கு இடமான பணமாற்றங்களை செய்துள்ளன. உலக அளவில் இவை 85% சதேகத்துக்கு இடமான பாரிய பண மாற்றங்கள்.

உதாரணமாக Atiku Abubakar என்ற நைஜீரியாவின் முன்னாள் உதவி சனாதிபதி அந்நாட்டின் எண்ணெய்வள நிதியத்தில் இருந்து $100 மில்லியன் பணத்தை களவாடி உள்ளார் என்று கூறி அந்நாட்டு Senate குழு அவரை விசாரணை செய்தது. ஆனால் விசாரணை தோல்வியில் முடிந்தது. சில ஆண்டுகளின் பின் அவரின் மனைவி Rukaiyatu Abubakar $1 மில்லியன் பணத்தை Habib Bank மூலம் டுபாய் அனுப்பி மாடி வீடு (condo) ஒன்றை டுபாயில் கொள்வனவு செய்திருந்தார்.