சீனாவில் 600 km/h வேகத்தில் Meglev ரயில்

சீனாவில் 600 km/h வேகத்தில் Meglev ரயில்

சீனா 600 km/h (373 mph) வேகத்தில் செல்லவல்ல Maglev வகை ரயில் ஒன்றை செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்துள்ளது. இது சேவைக்கு வரும்போது உலகிலேயே அதிவேக ரயில் ஆக இது இருக்கும். இது சீனாவிலேயே முற்றாக தயாரிக்கப்பட்டது.

Maglev (magnetic levitation) வகை ரயில்கள் சக்கரங்களை கொண்டிரா. பதிலாக ரயிலுக்கு கீழேயும், தண்டவாளத்திலும் தற்காலிக காந்தப்புலத்தை ஏற்படுத்தி, தண்டவாளத்தில் தொடாது ரயில் பயணிக்கும். ஒரு இடத்தை ரயில் கடந்தவுடன், அந்த இடத்திலான காந்தப்புலமாக்கல் நிறுத்தப்படும். அதாவது காந்தப்புலமாக்கலும் ரயிலுடன், ரயிலின் வேகத்தில் பயணிக்கும்.

இவ்வாறு 600 km/h வேகத்தில் செல்லும் இந்த ரயில் பயணம், பல இடங்களில் விமான பயணத்திலும் விரைவானதாக இருக்கும். உதாரணமாக இந்த ரயில் தலைநகர் பெய்ஜிங் முதல் ஷாங்காய் வரையான பயணத்துக்கு 2.5 மணித்தியாலங்கள் மட்டுமே எடுக்கும். ஆனால் இந்த பயணத்திற்கு விமானங்கள் 3 மணித்தியாலங்களும், தற்போதைய வேக ரயில் 5.5 மணித்தியாலங்களும் எடுக்கின்றன.

ஜேர்மனி தயாரித்த பழைய வகை Maglev ரயில் ஷாங்காயில் தற்போது சேவை செய்கிறது. சிறிய தூரம் செல்லும் இது உல்லாச பயணிகளை கவரவே இயங்குகிறது. 2003ம் ஆண்டு முதல் இயங்கும் இதன் அதி கூடிய வேகம் 431 km/h மட்டுமே. மிகையான முதலீடு காரணமாக ஜேர்மனியோ அல்லது வேறு நாடுகளோ இதை சேவையில் அமர்த்தவில்லை.