சீனாவை எதிர்கொள்ள 500 யுத்த கப்பல்கள் தேவை

சீனாவை எதிர்கொள்ள 500 யுத்த கப்பல்கள் தேவை

வேகமாக வளர்ந்துவரும் சீன படைகளை எதிர்கொள்ள குறைந்தது 500 யுத்த கப்பல்கள் அமெரிக்காவுக்கு தேவை என்று அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் Mark Esper நேற்று செவ்வாய்க்கிழமை கூறி உள்ளார். தற்போது அமெரிக்காவிடம் 300 க்கும் குறைந்த தொகையான யுத்த கப்பல்களே உள்ளன. அவற்றிலும் சில அடிக்கடி திருத்த வேலைகளுக்கு செல்லும் மிக பழையன.

Future Naval Force Study என்ற மேற்படி ஆய்வு அமெரிக்காவின் உதவி பாதுகாப்பு செயலாளர் David Norquist என்பவரால் தயாரிக்கப்பட்டது.

சீனா தனது படைகளை நவீனமாக்கும் பணிகளை 2035 ஆம் ஆண்டு அளவில் செய்து முடிக்கும் என்றும், 2049 ஆம் ஆண்டு அளவில் சீனாவிடம் முதல்தர படைகள் இருக்கும் என்றும் மேற்படி ஆய்வு கூறியுள்ளது. அந்த படைகளை எதிர் கொள்ளவே அமெரிக்காவுக்கு குறைந்தது 500 யுத்த கப்பல்கள் தேவை என்கிறார் Esper.

முதல் படியாக 2035 ஆம் ஆண்டு அளவில் 355 யுத்த கப்பல்களை கொண்டிருக்கலாம் என்றும், ஆனால் 2045 ஆம் ஆண்டு அளவில் 500 யுத்தகப்பல்கள் தேவை என்றும் Esper கூறி உள்ளார்.

இந்த ஆண்டில் (2020) யுத்த கப்பல் கட்டுமானத்துக்கு அமெரிக்கா $24 பில்லியன் வழங்கி இருந்தது. பொருளாதார நெருக்கடிகள் காரணமாக அடுத்த ஆண்டு (2021) $19.9 பில்லியன் மட்டுமே யுத்த கப்பல் கட்டுமானத்துக்கு செலவிடப்படும்.

தேவையான பணத்தை அமெரிக்க காங்கிரஸ் வழங்கினால் மட்டுமே Esper ரின் விருப்பங்கள் நிறைவேறும்.

ஒரு தரமான Columbia-class ballistic missile நீர்மூழ்கிக்கு மட்டும் சுமார் $10 பில்லியன் செலவாகும்.