செல்வந்த சீனர் தற்போது சைப்ரசுக்கு படையெடுப்பு

செல்வந்த சீனர் தற்போது சைப்ரசுக்கு படையெடுப்பு

சீனாவின் செல்வந்தர் தமது பண பலத்தை பயன்படுத்தி முற்காலங்களில் அமெரிக்கா, கனடா, பிரித்தானியா போன்ற நாடுகளில் குடியுரிமை பெற்று வந்துள்ளனர். ஆனால் சமீப காலங்களில் சைப்ரஸ் (Cyprus) அவர்களின் இரண்டாம் குடியிருமை நாடாக இடம்பெற ஆரம்பித்து உள்ளது என்கிறது Al Jazeera செய்தி சேவை.

2017 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையான காலத்தில், அமெரிக்க சனாதிபதி ரம்ப் ஆட்சி காலத்தில், 500 க்கும் அதிகமான செல்வந்த சீனர்கள் சைப்பிரஸ் குடியிருமை பெறுள்ளனர் என்கிறது Al Jazeera சேவையின் ஆய்வு கட்டுரை.

ஆசியாவின் முதலாவது பெண் செல்வந்தரான Yang Huiyan என்பவரும் சைபிரசில் குடியிருமை பெற்றுள்ளார். தந்தையின் சொத்துக்கள் மூலம் பணக்காரி ஆனா இவரிடம் சுமார் $20 பில்லியன் பெறுமதியான சொத்துக்கள் உண்டு என கூறப்படுகிறது. அதனால் இவர் உலகின் 6 ஆவது பெரிய பெண் செல்வந்தர் ஆகிறார். இவர் சீனாவில் வீடுகளை கட்டி விற்கும் வர்த்தகம் உட்பட பல வர்த்தகங்களை செய்கிறார். இவர் 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 23 ஆம் திகதி சைப்பிரஸ் குடியுரிமையை பெற்றுள்ளார்.

Lu Wenbin என்ற செல்வந்தர் 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சைப்பிரஸ் குடியிருமை பெற்றுள்ளார். இவர் Sichuan Troy Information Technology என்ற நிறுவனத்தின் அதிகாரி ஆவார்.

Chen Anlin என்ற செல்வந்தர் 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சைப்பிரஸ் குடியுரிமை பெற்றுள்ளார். Fu Zhengjun என்ற செல்வந்தர் 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சைப்பிரஸ் குடியுரிமை பெற்றுள்ளார். Zhao Zhenpeng என்ற செல்வந்தர் 2019 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் சைப்பிரஸ் குடியுரிமை பெற்றுள்ளார்.

சைப்பிரஸ் குடியுரிமை கொள்பவர்கள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுள் நுழைவது இலகுவாகிறது. சைப்பிரஸ் குடியுரிமைக்கு குறைந்தது $2.5 மில்லியன் பெறுமதியான முதலீடு அவசியம். சைபிரசில் அதிகம் குடியுரிமை பெறுவது ரஷ்யாவின் செல்வந்தரே. அவர்களுக்கு அடுத்து சீனர் உள்ளனர்.

செல்வந்த சீனர்கள் அந்நிய நாடுகளில் பெருமளவு முதலீடு செய்வது, பெருந்தொகையான வீடுகள் போன்ற சொத்துக்களை கொள்வனவு செய்தல் போன்ற அணுகுமுறைகள் மூலம் குடியுரிமை பெறுவார். அத்துடன் அவர்களின் பிள்ளைகள் மேற்கு நாடுகளில் கல்வி பயிலவும் இரண்டாவது குடியுரிமை பயன்படும். மேற்கு நாட்டு வங்கிகளிலும் கணக்குகளை ஆரம்பிக்க குடியுரிமை உதவும். ஆனாலும் பெற்றார் தொடர்ந்தும் சீனாவிலேயே தங்கி தொழில் செய்வர்.

சீனா இரட்டை குடியுரிமையை அனுமதிக்காத நாடு. அதனால் இன்னோர் நாட்டு குடியுரிமை பெரும் சீனர், சீன குடியுரிமையை உடனடியாக இழப்பர். ஆனாலும் அந்த நபர் சீனா செல்லும்போது குற்றங்கள் புரியின், அவர் சீனர் ஆகவே சட்டத்தினால் கணிக்கப்படுவர்.