தாய்லாந்திலும் வீடு கொள்வனவுக்கு வதிவிட விசா

தாய்லாந்திலும் வீடு கொள்வனவுக்கு வதிவிட விசா

தாய்லாந்தும் அங்கு மாடி வீடுகளை கொள்வனவு செய்வோருக்கு விசேட 5-ஆண்டு வதிவிட விசா வழங்க முன்வந்துள்ளது. புதிய பணத்துக்கு விசா வழங்கும் முறை தை மாதம் 1 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கும். இந்த விசா பெற விரும்புவோர் தாய்லாந்தில் குறைந்தது 10 மில்லியன் baht ($331,560) பெறுமதியான அடுக்குமாடி (condo) வீடு ஒன்றை கொள்வனவு செய்தல் வேண்டும். இந்த வீட்டுக்கொள்வனவு மூலம் வதிவிட விசா பெறுவோர் 5 ஆண்டுகளுக்கு அந்த வீட்டை விற்பனை செய்ய முடியாது.

தாய்லாந்தின் உல்லாசப்பயண திணைக்களத்தின் கட்டுப்பாடில் இருக்கும் இந்த திட்டம் Thailand Privilege Card என்ற அட்டையை மேற்படி முதலீடு செய்வோருக்கு வழங்கும்.

2003 ஆம் ஆண்டு முதல் அங்கு வேறுசில பணத்துக்கு விசா போன்ற திட்டங்கள் இருந்தன. அவற்றின் மூலம் 11,100 வீடுகள் வெளிநாட்டவரால் கொள்வனவு செய்யப்பட்டு இருந்தன. அதில் சீனரே 31% பங்கை கொண்டு 1 ஆம் இடத்தில் இருந்தனர். சுமார் 8% பங்கை கொண்ட ஜப்பானியர் 2 ஆம் இடத்திலும், தென்கொரியார் 3 ஆம் இடத்திலும், பிரித்தானியர் 4 ஆம் இடத்திலும், அமெரிக்கர் 5 ஆம் இடத்திலும் இருந்தனர்.

தாய்லாந்தில் கடந்த ஜூன் மாதம் 384,565 மாடி வீடுகள் விற்பனை செய்யப்படாது இருந்துள்ளன. அவற்றின் மொத்த பெறுமதி சுமார் $45 பில்லியன். விற்பனை செய்யப்படாத வீடுகளை விற்பதே இந்த விசா திட்டத்தின் நோக்கம்.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளான கிரேக்கம், போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகியன ஏற்கனவே முதலீட்டுக்கு வதிவுரிமை கொண்ட விசா வழங்கி வருகின்றன. அந்த விசா ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் எங்கும் பயணிக்கும், முதலிடும், படிக்கும் உரிமைகளையும் வழங்குகிறது.