நியூ யார்க் புலிக்கும் கொரோனா தொற்றியது

Tiger
.
அமெரிக்காவின் நியூ யார்க் பகுதியில் உள்ள Bronx மிருகக்காட்சியகத்தில்  உள்ள Nadia என்ற மலாயன் புலிக்கும் கொரோனா வைரஸ் தொற்றி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஒரு மிருகக்காட்சியகத்தில் இருந்தாலும் இந்த புலி காட்டு மிருகம் என்ற வகையிலேயே உள்ளது, வளர்ப்பு மிருகம் அல்ல.
.
இந்த புலி இருமல் கொண்டிருந்ததாகவும், அதனால் ஏப்ரல் 2 ஆம் திகதி பரிசோதனை செய்யப்பட்டதாகவும் அப்போதே அதற்கு கொரோனா தொற்றியது தெரிந்தது என்றும் கூறப்படுகிறது. இந்த காடசியக்கத்தில் மேலும் ஒரு மலாயன் புலியும், இரண்டு சைபீரியன் புலிகளும், மூன்று ஆபிரிக்க சிங்கங்களும் உள்ளன. அவையும் இருமல் கொண்டதுடன், உணவுக்கும் விருப்பம் இன்றி உள்ளனவாம். இதுவரை அவை பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை.
.
இந்த புலிக்கு அதன் பராமரிப்பாளர் ஒருவரிடம் இருந்தே வைரஸ் தொற்றி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த காட்சி சாலை மார்ச் 16 ஆம் திகதி முதல் பொதுமக்களுக்கு மூடப்பட்டு உள்ளது.  ஒரு காட்டுமிருகத்துக்கு மனிதரில் இருந்து கொரோனா தொற்றியது அறியப்பட்டது இதுவே முதல் தடவை.
.
ஹாங் காங் நகரில் ஒரு Pomeranian வளர்ப்பு நாய்க்கும், German shepherd நாய்க்கும், பெல்ஜியம் நகரில் ஒரு வளர்ப்பு பூனைக்கும் கொரோனா தொற்றி இருந்தது. சீன ஆய்வு ஒன்று பூனைகள் இந்த வைரஸை காவக்கூடியன என்று கூறியிருந்தது.
.