பிரான்ஸ் நீதிமன்றில் வியட்நாம் Agent Orange வழக்கு

பிரான்ஸ் நீதிமன்றில் வியட்நாம் Agent Orange வழக்கு

Tran To Nga என்ற 78 வயது பெண்ணின் Agent Orange தொடர்பான வழக்கு ஒன்றை விசாரிக்க பிரான்ஸ் நீதிமன்றம் இணங்கி உள்ளது. வியட்நாம் யுத்த காலத்தில் வியட்நாமில் வாழ்ந்திருந்த இவர் மட்டுமன்றி, இவரின் மகள் ஒருவரும் Agent Orange பாதிப்பால் மரணமாகி இருந்தார். Agent Orange நஞ்சை வீசிய அமெரிக்காவுக்கு எதிராக வழக்கை தொடர்வதை தவிர்த்து, அமெரிக்க படைகளுக்கு இரசாயனங்களை வழங்கிய 14 நிறுவனங்கள் மீதே வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

அமெரிக்காவின் மிக பெரிய இரசாயன நிறுவனங்களான Monsanto, Dow Chemical ஆகியனவும் மேற்படி 14 நிறுவனங்களுள் அடங்கும். அவை நஞ்சை வீசியது அமெரிக்க இராணுவம் என்றும், தாமல்ல என்றும் வாதாடுகின்றன.
இந்த வழக்கு 2014ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டு இருந்தாலும் தற்போதே நீதிமன்றம் அதை விசாரிக்க இணங்கி உள்ளது.

1962ம் ஆண்டு முதல் 1971ம் ஆண்டு வரையான காலத்தில் அமெரிக்கா சுமார் 80 மில்லியன் லீட்டர் Agent Orange நஞ்சை வியட்நாம், லாவோஸ், கம்போடியா காடுகளில் வீசி இருந்தது. இதற்கு பல மில்லியன் மக்கள் பாதிப்பு அடைந்திருந்தனர். அத்துடன் சுமார் 150,000 குழந்தைகள் பிறப்பு குறைபாடுகளுடன் பிறந்து இருந்தனர்.

அமெரிக்கா, கனடா, அஸ்ரேலியா ஆகிய நாடுகள் வியட்நாம் யுத்தத்தில் பங்குகொண்டு பாதிக்கப்பட்ட தம் நாடுகளின் படையினருக்கு ஏற்கனவே நட்ட ஈடு வழங்கி உள்ளன. ஆனால் அந்த நாடுகள் வியட்நாம் மக்களுக்கு நட்ட ஈடு வழங்க மறுத்துவிட்டன.