பைடென் சனாதிபதியாவது மெல்ல உறுதியாகிறது

பைடென் சனாதிபதியாவது மெல்ல உறுதியாகிறது

ஒபாமா காலத்து உதவி சனாதிபதி ஜோ பைடென் (Joe Biden) அடுத்த அமெரிக்க சனாதிபதியாவது மெல்ல உறுதியாகி வருகிறது. தபால் மூல வாக்குகள், பிந்தி வரும் படையினரின் வாக்குகள், நிபந்தனைகள் கொண்ட வாக்குகள் போன்றன பல மாநிலங்களில் தற்போதும் எண்ணப்பட்டு வந்தாலும், பல இடங்களில் பொதுவாக 99% வாக்குகள் எண்ணப்பட்டு உள்ளன.

மொத்தம் 5 மாநிலங்களில் சற்று அதிகம் வாக்குகள் எண்ணப்பட உள்ளன. ஆனாலும் தற்போதைய தரவுகளின்படி பைடென் சனாதிபதி ஆகுவது மெல்ல உறுதியாகி வருகின்றது.

தீர்மானிக்கப்படவேண்டிய மாநிலங்களின் தற்போதைய விபரம்:

Nevada: பைடேன் 49.7%, ரம்ப் 48.1%, எண்ணப்பட்டவை 87%
Arizona: பைடேன் 50.0%, ரம்ப் 48.6%, எண்ணப்பட்டவை 90%
Pennsylvania: பைடென் 49.5%, ரம்ப் 49.3%, எண்ணப்பட்டவை 98%
Georgia: பைடென் 49.4%, ரம்ப்  49.4%, எண்ணப்பட்டவை  99%

North Carolina: ரம்ப் 50.1%, பைடென் 48.7%, எண்ணப்பட்டவை 94%

மேலே உள்ள 5 மாநிலங்களில் North Carolina மாநிலத்தில் மட்டுமே ரம்ப் முன்னணியில் உள்ளார். ஏனைய 4 மாநிலங்களிலும் பைடென் முன்னணியில் உள்ளார்.

எண்ணப்பட உள்ள வாக்குகளில் பெரும்பாலானவை அந்தந்த மாநிலங்களில் உள்ள பெருநகர வாக்குகளே. பெருமளவு மக்கள் நகரங்களில் வாழ்வதால் அப்பகுதிகளில் இருந்து பெருமளவு தபால் மூல வாக்குகள் கிடைத்துள்ளன. அதேவேளை நகரங்கள் பொதுவாக பைடென் (Democratic கட்சி) சார்பானவை.

ரம்ப்  தரப்பு பல மாநிலங்களில் மீள் கணக்கெடுப்பு நிகழ்த்த முனைகிறது. அவ்வாறு செய்வது எந்த வகையில் அவர்களுக்கு பலன் தரும் என்பதை அவர்களே அறியவில்லை.

உடைந்துபோன அமெரிக்காவின் உக்கிரமான இவ்வாண்டு தேர்தல் வரலாற்றில் என்றுமில்லாத அளவு வாக்குகளை பெற்றுள்ளது. 2008 ஆம் ஆண்டு ஒபாமா பெற்றது 69,498,516 வாக்குகள். இந்த ஆண்டு பைடென் இதுவரை பெற்றது 73,753,665 (இத்தொகை மேலும் அதிகரிக்கும்). அது 4.26 மில்லியன் அதிகம் வாக்குகள். இந்த ஆண்டு ரம்ப் இதுவரை பெற்றது 69,803,135 வாக்குகள். அதனால் ரம்ப் இதுவரை பெற்றதும் ஒபாமா பெற்ற வாக்குகளிலும் அதிகம்.

இந்த ஆண்டு இதுவரை எண்ணப்பட்ட வாக்குகள் சுமார் 144 மில்லியன். கடந்த 2016 சனாதிபதி தேர்தலில் எண்ணப்பட்ட மொத்த வாக்குகள் 137.1 மில்லியன் மட்டுமே.