மன்னரை அவமதித்த 63 வயது பெண்ணுக்கு 43 ஆண்டு சிறை

மன்னரை அவமதித்த 63 வயது பெண்ணுக்கு 43 ஆண்டு சிறை

தாய்லாந்தில் மன்னரை அவமதித்த Anchan என்ற 63 வயது பெண்ணுக்கு அந்நாட்டு இரகசிய நீதிமன்றம் 43 ஆண்டு சிறை தண்டனையை விதித்துள்ளது. முதலில் 87 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டாலும் பின்னரே அது 43 ஆண்டு ஆக குறைக்கப்பட்டது.

மேற்படி பெண் செய்த குற்றம் இன்னொருவர் இணையத்தில் பதித்த மன்னர் Vajiralongkorn தொடர்பான ஒலி பதிவு ஒன்றை social media மூலம் மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டதே (share). மன்னருக்கு எதிராக வெளிநாடுகளில் உள்ள தாய்லாந்து மக்கள் செய்யும் பதிவுகளை தாய்லாந்தில் பரவுவதை தடை செய்வதே மேற்படி பெண் மீதான தண்டனையின் உள்நோக்கம்.

2014ம் ஆண்டு இராணுவம் ஆட்சியை கைப்பற்றிய பின் கைது செய்யப்பட்ட மேற்படி பெண் மீது மொத்தம் 29 குற்றங்கள் சுமத்தப்பட்டு இருந்தன. அவை YouTube மற்றும் Facebook தொடர்பானவை. அவருடன் மொத்தம் 14 பேர் கைது செய்யப்பட்டு இருந்தனர்.

மேற்படி வழக்கு மூடிய அறைக்குள்ளேயே விசாரணை செய்யப்பட்டது. பெண்ணுக்கு எதிரான ஆதாரங்களும் இரகசியமாக வைக்கப்பட்டு இருந்தன. இரகசிய வழக்குக்கு தேசிய பாதுகாப்பே காரணம் என்று அரசால் கூறப்பட்டது.

தாய்லாந்து அரசியல் மன்னரை இராணுவம் பாதுகாக்க, இராணுவத்தை மன்னர் பாதுகாக்கும் நிலையில் உள்ளது.