யுக்கிரைன்-ரஷ்ய எல்லையில் மீண்டும் முறுகல் உக்கிரம்

யுக்கிரைன்-ரஷ்ய எல்லையில் மீண்டும் முறுகல் உக்கிரம்

ரஷ்யாவை எல்லையாக கொண்ட யுக்கிரைனின் கிழக்கு பகுதியில் மீண்டும் முறுகல் நிலை உக்கிரம் அடைந்து உள்ளது. இந்நிலை மீண்டும் ரஷ்யாவுக்கும்,  யுக்கிரைனுக்கும் இடையில் போர் ஒன்றுக்கு வழிவகுக்கலாம் என்று கருதப்படுகிறது. கடந்த சில தினங்களாக ரஷ்யாவும் தனது படைகளை யுக்கிரைன் எல்லையோரம் குவித்து வருகிறது.

யுக்கிரைனின் கிழக்கே ரஷ்ய மொழி பேசும் மக்களே பெருமளவில் வாழ்கின்றனர். இப்பகுதியே பாரிய தொழிற்சாலைகளை கொண்டுள்ளது. இப்பகுதி மக்கள் கூடிய அரசியல் சுதந்திரத்தை யுக்கிரைன் மத்திய அரசிடம் இருந்து பெற முனைகின்றனர்.

அத்துடன் யுக்கிரைன் NATO அணியுடன் இணையவும் முயன்றுவருகிறது. ரஷ்யா அதையும் விரும்பவில்லை. மீண்டும் ஒரு யுத்தம் வந்தால் இம்முறை காலுக்கு கீழே சுடுவதற்கு பதிலாக முகத்தில் சுடுவோம் என்று ரஷ்ய இராணுவ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

சனாதிபதி பைடென் ஆட்சிக்கு வந்த நாள் முதல் ரஷ்ய சனாதிபதி பூட்டின் மீது வசைபாடி வந்துள்ளார். பூட்டினை தண்டிக்கப்போவதாகவும் பைடென் கூறியிருந்தார். ரஷ்யா மீது மேலதிக தடைகளையும் அமெரிக்கா விதித்து உள்ளது. அதனாலும் பூட்டின் விசனம் கொண்டிருந்தார்.

அமெரிக்கா தனது இரண்டு யுத்த கப்பல்களை துருக்கியின் நீரினை ஊடாக கருங்கடலுக்கு அனுப்ப உள்ளதாகவும் கூறியுள்ளது. அந்த கப்பல்கள் ஏப்ரல் 14ம், 15ம் திகதிகளில் துருக்கி நீரினை ஊடு செல்லும் என்று அமெரிக்கா துருக்கிக்கு அறிவித்து உள்ளது.

2014ம் ஆரம்பித்த இப்பகுதி யுத்தத்துக்கு இதுவரை சுமார் 14,000 பேர் பலியாகி உள்ளனர்.