ரம்ப் நிகழ்த்த விரும்பிய G7 மாநாடு பின்போடப்பட்டது

G7

அமெரிக்க சனாதிபதி ரம்ப் ஜூன் மாதம் நிகழ்த்த விரும்பிய G7 மாநாடு காலவரை இன்றி பின்போடப்பட்டு உள்ளது. ரம்ப் பிரித்தானிய பிரதமர், பிரெஞ்சு சனாதிபதி ஆகியோருடன் பலதடவைகள் தொடர்பு கொண்டிருந்தாலும் அவர் விரும்பியபடி G7 மாநாடு ஜூன் மாதம் இடம்பெறாது.
.
இந்த அறிவிப்பு மார்ச் மாதத்தில் அரைகுறையாக தெரிவிக்கப்பட்டு இருந்தாலும், ரம்ப் மாநாட்டை ஜூனில் நிகழ்த்த கடும் முயற்சி செய்துவந்தார். மாநாட்டை பின்போட்டமைக்கு கரோனாவை காரணம் காட்டினாலும், உண்மை காரணங்கள் வேறு சிலவும் உண்டு என்று கூறப்படுகிறது.
.
அமெரிக்காவில் இடம்பெறவிருந்த G7  மாநாட்டில் தான் பங்கு கொள்ள முடியாது என்று ஜேர்மனி அதிபர் ஏற்கனவே கூறி உள்ளார். அவரும் கரோனாவை காரணம் காட்டினாலும், ரம்பின் சில நோக்கங்கள் அவர் பின்வாங்க காரணங்களாக இருந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
.
ரம்ப் இடம்பெறவிருந்த G7 மாநாட்டில் கலந்து கொள்ள ரஷ்யா, அஸ்ரேலியா, தென் கொரியா, இந்தியா ஆகிய நாடுகளுக்கு அழைப்பு வழங்கவிருந்தார். அது மட்டுமன்றி மேற்படி நாடுகளை இணைத்து  G7 அமைப்பை  G11 ஆக அமைக்க விரும்பி இருந்தார். இவரின் நோக்கம் சீனாவுக்கு எதிராக குழு சேர்வதே. அத்துடன் ஹாங் காங் நிலவரங்களும் ரம்பால் உரையாடப்பவிருந்தது.
.
ஆனால் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவை மீண்டும் G7 இல் இணைக்க விரும்பவில்லை. முன்னர் ரஷ்யா G7 இல் அங்கம் கொண்டிருந்தாலும், 2014 ஆம் ஆண்டு ரஷ்யா Crimea பகுதியை ரஷ்யாவுடன் இணைத்ததன் காரணமாக  G7 இல் இருந்து வெளியேற்றப்பட்டு இருந்தது.
.
அண்மைக்காலங்களில் அஸ்ரேலிய அரசு ரம்புடன் இணைந்து இயங்கியது ரம்பின் ஆதரவுடன் G7 அமைப்பில் இணையும் நோக்கத்தில் அமைந்ததாக இருக்கலாம்.
.
ஜூன் சந்தர்ப்பத்தை இழந்த ரம்ப், தற்போது செப்டம்பர் முதல் நவம்பர் வரையான காலத்தில் G7 மாநாட்டை நிகழ்த்த விரும்புகிறார். அவரின் நோக்கம் நவம்பர் மாதம் நிகழவுள்ள சனாதிபதி தேர்தலே.
.
நவம்பர் மாத நடுப்பகுதியில் முன்னர் திட்டமிட்டபடி G20 மாநாடு இடம்பெறவுள்ளது.
.