அமெரிக்காவிலிருந்து கனடா ஓடும் அகதிகள்

Trump

அண்மையில் அமெரிக்காவின் டிரம்ப் அரசு அங்குள்ள அகதிகளுக்கு எதிராக எடுத்துக்கொண்ட நடவடிக்கைகளை தொடர்ந்து தற்போது அமெரிக்காவில் உள்ள சில அகதிகள் கனடாவுக்கு தப்பி ஓடுகின்றனர். தற்போது கனடாவில் குளிர் காலம் ஆகையால் இவர்களுள் சிலர் கடும் குளிரில் அகப்பட்டு உடல் பாதிப்புக்கும் உள்ளாகின்றனர்.
.
இவ்வாறு நகரும் அகதிகளில் சிலர் கடாவின் Manitoba மாநிலத்து பெருநகரான Winnipeg நகருக்கு தெற்கே, சுமார் 110 km தொலைவில் உள்ள அமெரிக்க-கனடிய எல்லை நகரான Emerson மூலம் கனடா சென்றுள்ளனர். கடந்த இரு கிழமைகளில் மட்டும் சுமார் 50 அகதிகள் Emerson மூலம் கனடா சென்றுள்ளார். Emerson நகரின் மொத்த சனத்தொகை 700 மட்டுமே.
.
கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான ஒப்பந்தப்படி அமெரிக்காவில் இருந்து கனடிய எல்லை வரும் அகதிகள் திருப்பி அமெரிக்காவுக்கும், கனடாவில் இருந்து அமெரிக்க எல்லை வரும் அகதிகள் மீண்டும் கனடாவுக்கும் திருப்பி அனுப்பப்படலாம். இந்த சட்டத்தில் இருந்து தப்பும் நோக்கில் மேல் குறிப்பிடப்பட்ட அகதிகள் எல்லை அதிகாரிகளை தவிர்த்து காடுகள் மூலம் கனடா நுழைகின்றனர். அவ்வாறு பாதுகாப்பு அற்ற பகுதிகளால் செல்லும்போது அவர்கள் கடும் குளிரில் அகப்படுகிறார்கள்.
.
எல்லையை தாண்டி கனடாவுள் நுழைந்து பின்னர் அகதி நிலைக்கு விண்ணப்பித்தால் அவர்கள் கனடாவிலிருந்து அமெரிக்காவுக்கு திருப்பி அனுப்பப்படமாட்டார்.
.
இவ்வாறு கனடா ஓடும் அகதிகளில் சோமாலியர் அதிகமாக உள்ளனர். டிரம்ப் அண்மையில் தடை செய்த நாடுகளில் சோமாலியாவும் ஒன்று. இவர்களுடன் சூடான், சிரியா ஆகிய நாட்டு அகதிகளும் அடங்குவர். இந்த நாடுகளும் தடை செய்யப்பட்ட நாடுகளுள் அடங்கும்.
.