இந்தியாவில் 90,000 வெற்றிடத்துக்கு 28 மில்லியன் விண்ணப்பம்

IndianRailways

அண்மையில் இந்திய புகையிரத திணைக்களம் 90,000 வெற்றிடங்களை நிரப்ப விண்ணப்பங்களை கேட்டிருந்தது. அந்த கேள்விக்கு சுமார் 28 மில்லியன் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன.
.
இந்திய புகையிரத சேவை சுமார் $130 பில்லியன் செலவில் தற்போது நவீனமயம் ஆக்கப்படுகிறது. அதன் ஒருபடியாக 26,502 புகையிரத சாரதிகள், 62,907 பராமரிப்பு ஊழியர் ஆகியோரை நியமிக்க புகையிரத சேவை முன்வந்திருந்தது. அந்த வெற்றிடங்களுக்கே சுமார் 28 மில்லியன் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.
.
பல பல்கலைக்கழ பட்டதாரிகளும் மேற்படி வெற்றிடங்களுக்கு விண்ணப்பம் செய்துள்ளார்களாம். அவர்களில் சிலர் PhD வரை கல்வி கற்றவர்கள்.
.
ஊழியர்கள் எண்ணிக்கையில் உலகத்திலேயே 8வது பெரிய நிறுவனமான இந்திய புகையிரத சேவை 1.4 மில்லியன் ஊழியர்களை கொண்டது (1.3 மில்லியன் உறுப்பினர்களை கொண்ட இந்திய இராணுவம் 9ஆம் இடத்தில் உள்ளது). இந்தியா சுமார் 121,407 km நீளமான தண்டவாளங்களை, 7,172 புகையிரத நிலையங்களையும் கொண்டது. நாள் ஒன்றில் சுமார் 23 மில்லியன் மக்கள் இதில் பயணிக்கிறார்கள்.
.
அதேவேளை இந்திய எதிர்க்கட்சி, அடுத்த வருடம் தேர்தல் வரும் நிலையில், இது ஒரு வாக்கு வாங்கும் நோக்கில் ஆளும் கட்சியால் செய்யப்படும் நடவடிக்கை என்றுள்ளது. 2014 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த மோதி, தான் 100 மில்லியன் புதிய வேலைகள் உருவாக்குவேன் என்று கூறியிருந்தார்.
.