இந்தியாவும் விரைவில் முதியோர் இல்லமாகலாம்

India

அண்மைக்காலங்களில் ஏற்பட்டுவரும் சனத்தொகை மாற்றங்களால் இந்தியாவும் விரைவில் ஒரு முதியோர் (60+ வயதுடையோர்) நிறைந்த நாடாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இந்த முதியோர் பெரும்பாலும் தனிமையிலேயே வாழவும் நேரிடும்.
.
தற்போது இந்தியாவில் சுமார் 100 மில்லியன் முதியோர் உள்ளதாக கணிப்பிடப்பட்டு உள்ளது. அத்துடன் கடந்த சில ஆண்டுகளாக முதியோர் எண்ணிக்கை அதிகரிப்பு வீதம், இந்தியாவின் சனத்தொகை அதிகரிப்பு வீதத்தின் இரண்டு மடங்காக இருந்து வருகிறது. இந்நிலை தொடரின், 2050 ஆம் ஆண்டில் இந்தியாவின் சனத்தொகையின் 25% முதியோராக இருக்கும்.
.
அதேவேளை இந்த முதியோர் தனிமையிலேயே வாழவும் நேரிடும். இளம் சந்ததியினர் வெளிநாடுகள் செல்வதாலும், கிராமத்து இளம் சந்ததி வேலைவாய்ப்பு காரணமாக பெரு நகரங்ககளை நோக்கி செல்வதாலும் கிராமத்து முதியோர் தனிமையில் வாழ நேரிடும்.
.
இந்தியாவில் தனிமையில் வாழும் முதியோருக்கு தேவையான வசதிகளும் இருக்காது. Global Age Watch Index என்ற கணிப்பு ஒரு நாடு அந்நாட்டு முதியோருக்கு வழங்கும் வருமானம், சுகாதாரம் போன்ற அடைப்படை வசதிகளை சுட்டியாக காட்டுகிறது. 2015 ஆம் ஆண்டுக்கான அந்த சுட்டியின்படி கணிப்பிடப்பட்ட 96 நாடுகளுள் இந்தியா 71 ஆம் இடத்தில் இருந்துள்ளது. அதாவது இந்தியா மிக குறைந்த சலுகைகளையே முதியோருக்கு செய்கிறது.
.
சீனாவிலும் முதியோர் தொகையும், அவர்களின் வாழ்க்கை இடர்பாடுகளும் அதிகரித்து வருகின்றன. அங்கு 1979 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டுவரை நடைமுறையில் இருந்த குடும்பத்துக்கு ஒரு குழந்தை மட்டும் என்ற கட்டுப்பாடு முதியோர் எண்ணிக்கை அதிகரிக்க முக்கிய காரணமாக இருந்துள்ளது.
.
தற்போது சீனாவில் 230 மில்லியன் முதியோர் உள்ளதாக கூறப்படுகிறது. 2050 ஆம் ஆண்டில் இத்தொகை 480 மில்லியன் ஆகலாம். 2013 ஆம் ஆண்டில் சுமார் 50 மில்லியன் முதியோர் அங்கு தனிமையில் வாழ்ந்துள்ளனர்.
.
2050 ஆண்டளவில் உலக சனத்தொகையின் 22% முதியோராக இருக்கும் என்றும் சில கணிப்புகள் கூறுகின்றன.
.

முதியோருக்கு வசதிகள் நிறைந்த முதல் 5 நாடுகளாக சுவிட்சலாந்து, நோர்வே, சுவீடன், ஜேர்மனி, கனடா உள்ளன.
.