இலங்கைபோல் மாலிக்குள்ளும் இரு யுத்தம்

இளவழகன்

ஆப்கனிஸ்தானில் இருந்து போன விடயம் முடியமுன் அவசர அவசரமாக தனது இராணுவத்தை திருப்பி அழைத்த பிரெஞ்சு அரசு இப்போ தனது இராணுவத்தை பிரான்சின் முன்னாள் காலனியான மாலியுள் (Mali) அவசர அவசரமாக நுழைக்கிறது. சுமார் 800 பிரெஞ்சு இராணுவத்தினர் தற்போது மாலி சென்றுள்ளனர். இந்த எண்ணிக்கை 2500 வரை உயரலாம் என கூறப்பட்டுள்ளது. கனடாவும் பிரெஞ்சு இராணுவத்தின் ஆயுத தளபாட இடப்பெயர்வுக்கு பயன்படவென C-17 என்ற விமானத்தை அனுப்புகிறது. மாலியும் இன்னொரு ஆப்கானிஸ்தான் அல்லது சோமாலியா ஆகுமா? காலம் தான் பதில் சொல்லும்.

இலங்கையில் நடந்தது போலவே மாலிக்குள் இரண்டு யுத்தங்கள் நடைபெறுகின்றன எனலாம். இலங்கையில் நடந்த தமிழர்-சிங்களவர் யுத்தம் ஒன்று, அமெரிக்கா-இந்தியா யுத்தம் இன்னொன்று. அவ்வாறே மாலிக்குள்ளும் உள்நாட்டு யுத்தம் ஒன்று, மேற்கு நாடுகள்-அல்கைடா யுத்தம் இன்னொன்று.

சுமார் 15 மில்லியன் மக்களை கொண்ட மாலியின் வட பாகங்களில் இருக்கும் Tuareg இன மக்கள் தென் மாலியில் இருந்து விடுதலை பெற அரசியல் மற்றும் ஆயுத போர்களில் நீண்ட காலமாக ஈடுபட்டு வருகின்றனர். 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பிரெஞ்சு ஆட்சி மாலியை கைப்பற்றியபோதும் Tuareg இன மக்களே இறுதிவரை போராடியவர்கள். 1960 களில் பிரான்ஸ் மாலியை விட்டு நீங்கியபின் இவர்கள் மீண்டும் போராட தொடங்கினர். இவர்களுள் MNLA (National Movement for the Liberation of Azawad) ஒரு முக்கிய குழு.

MNLA க்கு உதவ வந்தவர்கள் அல்கைடா உறவுகொண்ட Ansar ud-Din என்ற ஆயுத குழு. Ansar ud-Din இன் உதவியுடன் MNLA பாரிய வெற்றிகளை ஈட்டி வந்தது. Ansar ud-Din (Defenders of Faith) என்ற குழு அதீத கடும் போக்கு கொண்ட இஸ்லாமிய sharia law வை நடைமுறைப்படுத்துபவர்கள். இவர்கள் AQIM (Al-Qaeda in the Islamic Maghreb) என்ற வட ஆபிரிக்க அல்கைடா குழுவுடன் தொடர்பு கொண்டவர்கள். விரைவில் Ansar ud-Din இனது கை ஓங்க MNLA இனது கை தாழ்ந்தது.

இதற்கிடையில், 2012 ஆம் ஆண்டு பங்குனியில் அமெரிக்காவில் IMET (International Militrary Education and Training) என்ற திட்டத்தில் இராணுவ பயிற்சி பெற்ற கப்டன் Amadou Sanogo என்பவர் அப்போதிருந்த ஜனாதிபதி Toumani Toure ஐ பதவி நீக்கிவிட்டு ஆட்சியை காப்பாற்றினார். சந்தர்ப்பத்தை பயன்படுத்திய Tuareg ஆயுத குழுக்கள் வடக்கே உள்ள நகரங்களை தம்வசப்படுத்த தொடங்கின இவர்களின் சனத்தொகையை 1.2 மில்லியன் என்கிறது விக்கிபீடியா. Ansar ud-Din படிப்படியாக பல நகரங்களை கைப்பற்றி இறுதியில் அரைப்பங்கு மாலியை கைப்பற்றி விட்டனர். Gao, Timbuktu, Nampala, Douentza போன்ற பல நரங்கள் தற்போது Ansar ud-Din கைவசம். தற்போது அவர்கள் தலைநகர் Bamako அண்மையில் உள்ளனர். மாலியில் 90% ஆனோர் முஸ்லீம்கள் என்பதால் இஸ்லாமிய ஆயுத குழுக்களுக்கு இடங்களை காப்பாற்றுவது இலகு.

பிரெஞ்சு இராணுவம் தற்போது வானத்தில் இருந்து குண்டுகளை மட்டுமே எதிரி நிலையங்கள் மீது போடுகிறது. பிரெஞ்சு மற்றும் இதர மேற்கு நாடுகளின் வருகையை கண்ட MNLA தாம் இப்போது Ansar ud-Din இன்மீதான யுத்தத்துக்கு உதவுவதாக கூறியுள்ளனர். (ஞாபகம் இருக்கிறதா இந்தியாவை வெளியேற்ற செய்துகொண்ட புலிகள்-பிரேமதாச உறவு?)

தற்போது கப்டன் Amadou Sanogo வும் பதவியில் இல்லை. மாலியில் ஒரு இடைக்கால அரசே உண்டு. இந்த நிலையில் அந்நிய இராணுவங்கள் யுத்தம் புரிய, உள்நாட்டவர் அதில் விரும்பியோ விரும்பாமலோ பங்கு கொள்வர். நிலைமை விரைவில் கட்டுப்பட்டுள் வருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். மாலி ஒரு ஆப்கானிஸ்தான் அல்லது சோமாலியா ஆகினாலும் ஆச்சரியப்பட எதுவுமில்லை. கடாபி வைத்திருந்த பாரிய அளவிலான ஆயுதங்கள் இப்பகுதிகளுள் பொசிந்துள்ளது.

பல MNLA போராளிகள் கேணல் கடாபியின் வாடகை இராணுவமாக இருந்தவர்கள் என்பதுவும் குறிப்பிடத்தக்கது. கடாபியின் வீழ்ச்சியின் பின் இவர்கள் மாலிக்கு ஆயுதங்களுடன் திரும்பியிருந்தனர்.