ஒரு-குழந்தை சட்டத்தை தளர்க்கும் சீனா

ChinaPopulation

சீனாவின் தற்போதைய அதீத வளர்ச்சிக்கு தந்தையான டெங் சியாஒ பிங் (Deng Xiao Ping) அறிமுகப்படுத்திய கடுமையான சட்டங்களில் ஒன்று ஒரு-குழந்தை சட்டம். இந்த சடத்தின் கீழ் ஒரு தம்பதியினர் ஒரு குழந்தையை மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும். தவறின் கடுமையான தண்டனைகள் வழங்கப்படும். பாரிய குற்றப்பணம் செலுத்துதல், மானியங்கள் குறைப்பு, பாடசாலை வசதிகள் மறுப்பு போன்றன இந்த தண்டனைகளில் அடங்கும். இந்த சட்டம் Hong Kong, Macau போன்ற விசேட பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
இரணை பிள்ளைகளும் இந்த சட்டத்துக்குள் அடங்கவில்லை.

இந்த சடத்தின் மூலம் சுமார் 200 முதல் 400 மில்லியன் பிறப்புகள் குறைக்கப்பட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த ஒரு-குழந்தை சட்டத்தின் மத்தியிலும் சீனாவின் சனத்தொகை தொடர்ந்தும் அதிகரித்துள்ளது (வரைபை பார்க்க). இந்த சட்டம் சீனாவை ஒரு செல்வந்த, பெருமளவில் பஞ்சம் குறைந்த நாடாக மாற்றினாலும், சில பாதக விளைவுகளையும் ஏற்படுத்தியுள்ளது.

ஒரு-குழந்தை சட்டம் நடைமுறைக்கு வந்தபின் பல தம்பதியினர் ஆண் குழந்தையை மட்டுமே பெற்றுள்ளனர். இதனால் பெண் குழந்தைகளுக்கும் ஆண் குழந்தைகளுக்கும் இடையிலான விகிதம் இயற்கையான 100:100 விகிதத்தை விட்டு விலகி ஏறக்குறைய 100:120 ஆக மாறியுள்ளது. அதாவது ஒவ்வொரு 120 ஆண்களில் 20 பெயர்களுக்கு பெண்கள் இல்லை.

தற்போதைய சீன தலைவர் சி ஜின் பிங் (Xi Jin Ping) இந்த சட்டத்தை சற்று தளர்த்த முன்வந்துள்ளார்.

ஆனாலும் சீனாவின் தற்போதைய இளம் சந்ததியினர் பல குழந்தைகளை பெற்றுக்கொள்வார்கள் என்பதற்கில்லை. அங்கு விவாகரத்து எண்ணிக்கையும் என்றுமில்லாதவாறு அதிகரித்து வருகிறது. வெகுவிரைவில் அங்கும் பெருந்தொகை முதியோரும் மிக சிறுதொகை உழைக்கும் இளம் சந்ததியும் இருக்கும்.