காலக்கணிப்பு – தமிழ்மரபும் ஐரோப்பியமரபும்

காலக்கணிப்பு – தமிழ்மரபும் ஐரோப்பியமரபும்

காலக்கணிப்பு – தமிழ்மரபும் ஐரோப்பியமரபும்
க. நீலாம்பிகை

மனித செயற்பாடுகளில் பருவகாலம் மிக முக்கியமான அம்சமாகும்.

     முதலெனப்படுவது நிலம் பொழுதிரண்டின்
இயல்பென மொழிப இயல்புணர்ந்தோரே

எனும் சூத்திரத்தின் மூலம் தொல்காப்பியரும் மனிதத்தின் முதற் பொருட்களில் ஒன்றாக பருவகாலத்தை குறிப்பிடுகின்றார்.

இவ்விதம் மனிதவாழ்வுடன் ஒன்றாக கலந்து அவனது வாழ்வில் ஆதிக்கம் செலுத்தும், அதேவேளை மனிதனால் எவ்விதத்திலும் கட்டுப்படுத்த இயலாத, பருவகாலம் தொடர்பான கணிப்பீடுகள் நாகரீகத்துக்கு நாகரீகம், காலத்திற்குக் காலம் அதன் அளவு வகுதிகள், ஒழுங்கு, எண்ணிக்கை என்பவற்றில் வேறுபட்டு வந்துள்ளன.

ரோம சாம்ராச்சியத்தின் ஆரம்பத்தில் (Romulus, 700 BC) மார்ச், ஏப்ரல், மே, யூன், குவாணன்டிலஸ், செக்ஸ்டிலஸ், செப்ரம்பர், ஒக்ரோபர், நவம்பர், டிசம்பர் எனும் 10 மாதங்களே இருந்தன. முதல் நான்கு மாதங்களும் கிரேக்க, ரோம தெய்வங்களான Mars, Aphrodite, Maia, Juno வையும் 5வது மாதத்திலிருந்து 10வது மாதம் வரை ஒழுங்கு நிலையையும் குறிப்பிட்டன. அத்துடன் இந்தப் 10 மாதங்களும் மொத்தம் 304 நாட்களை மட்டுமே கொண்டிருந்;தன.

நவீன எண்

லத்தீன் மொழி

மாத ஒழுங்கு

மாத பெயர்

5

Quinque

5வது மாதம்

Quintilis

6

Sex

6வது மாதம்

Sextilis

7

Septem

7வது மாதம்

September

8

Octo

8வது மாதம்

October

9

Novem

9வது மாதம்

November

10

Decem

10வது மாதம்

December

கி.மு. 713 ஆம் அண்டளவில் 2ம் ரோமச் சக்கரவர்த்தி Numa Pompilius 11வது மாதமாக ஜனவரியையும் 12வது மாதமாக பெப்ரவரியையும் சேர்த்துக் கொண்டார். இந்தப் 12 மாதங்களும்கூட மொத்தம் 355 நாட்களை மட்டுமே கொண்டிருந்தன.

கி.மு. 1ம் நூற்றாண்டில் (கி.மு. 46) ஜுலியஸ் சீசரினால் (Julius Caesar) ஆண்டின்  முதல் மாதம் மார்ச்சிலிந்து ஜனவரிக்கு மாற்றப்பட்டது. அத்துடன் இக்காலப்பகுதியில் Julius Caesar, அவருடைய மருமகன் Augustus Caesar ஆகியோரின் பெருமையை வெளிப்படுத்த 5வது மாதம் ஜுலை எனவும் 6வது மாதம் ஆகஸ்ட் எனவும் மாற்றப்பட்டது. இந்தக் கலண்டர் ஆண்டு 365 நாட்களை மட்டுமே கொண்டிருந்தது.

கி.பி. 1582 இல் 13வது போப்பாண்டவர் கிரகோரி (Pope Gregory XIII) என்பவரால் லீப் வருடம் (Leap Year) அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தக் கலண்டர் முறையே ஆண்டுக்கு 365.2425 நாட்களை கொண்டிருந்தது.

அதன் பின் ஜுலியன் கலண்டர் (Julian Calendar) குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவுமின்றி இன்றுவரை தொடர்கின்றது.

சுருங்க கூறின் ஐரோப்பிய ஆண்டு கணிப்பு முறமை சந்திரன் (Lunar) சார்ந்ததாக தெடங்கி பின்னர் படிப்படியான திருத்தங்கள் மூலம் சூரிய (Solar) முறையை ஒத்ததாக மாறியுள்ளது.

இதே சமயம் முற்றாக சூரிய (Solar) முறையிலான பழந்தமிழரின் காலக் கணிப்பீட்டை பின்வரும் தொல்காப்பிய சூத்திரத்தின் மூலம் அறியலாம்.

“காரும் மாலையும் முல்லை, குறிஞ்சி
கூதிர்யாமம் என்மர் புலவர்”

இச் சூத்திரத்திற்கு நச்சினார்கினியர் “காலவுரிமையெய்திய ஞாயிற்றுக்குரிய சிங்கவோரை முதலாக தண்மதிக்குரிய கடக வோரையீறாக வந்து முடிந்துணை ஓர் யாண்டாமாதலின், அதனை இம்முறையானே அறுவகைப்படுத்து இரண்டு திங்கள் ஒரு காலமாக்கினர்” என உரை எழுதியுள்ளார்.

அதாவது சூரியன் தனக்குரிய மனையாகிய சிம்மவோரையில் சஞ்சரிக்கும் கார்கால தொடக்கமாகிய ஆவணிமாதத்திலிருந்து சந்திரனின் மனையாகிய கடகவோரையில் சஞ்சரிக்கும் முதுவேனிற் கால இறுதியாகிய ஆடிமாதம் வரை ஓர் ஆண்டாகும். இங்கு இரு மாதங்கள் ஒரு காலமாக (பெரும்பொழுது) 12 மாதங்களும் ஆறு காலங்களாக வகுக்கப்பட்டுள்ளன.

ஓர் ஆண்டு 6 பெரும் பொழுதுகளாக வகுக்கப்பட்டிருப்பதைப் போல்  ஒரு நாள் 10 நாழிகைகளைக் கொண்ட  (4 மணித்தியாலம்) காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம், வைகறை எனும் 6 சிறு பொழுதுகளாகவும் வகுக்கப் பட்டள்ளதாக நச்சினார்க்கினியர் கூறியுள்ளார்.

தொல்காப்பிய 6 பெரும் பொழுது ஒழுங்கு பின்வருமாறு:

காலம்

மாதம்

கார் காலம் ஆவணி, புரட்டாதி
கூதிர் காலம் ஐப்பசி, கார்த்திகை
முன்பனி காலம் மார்கழி, தை
பின்பனி காலம் மாசி, பங்குனி
இளவேனில் காலம் சித்திரை, வைகாசி
முதுவேனில் காலம் ஆனி, ஆடி

பின்னர் ஆண்டின் முதற்காலம் கார்காலத்திலிருந்து இளவேனிற் காலத்திற் மாறியமைக்கு ஆரியச் செல்வாக்கு காரணமாக இருந்திருக்கலாம். ஏனெனில் சங்க இலக்கியங்களெல்லாம் காதலர் கூடும் காலமாக கார்காலத்தையே குறித்து நிற்கின்றன.  பாலைக் கலி மாத்திரம் இளவேனிற் காலத்தில் காதலன் வரவை எதிர்நோக்கும் தலைவி பற்றியதாகும். இளவேனிலைக் காதலுக்குரியதாகப் போற்றும் மரபு வடமொழிக்குரியது என க.ப. அறவாணன் (1976) குறிப்பிட்டுள்ளார். வசந்த ருதுவின் அழகை காளிதாசன் ருது சம்காரமாக வருணித்துள்ளதாக கூறப்பட்டள்ளது. எனினும் சிலப்பதிகாரத்தில் இளவேனிற் காலத்தில் வசந்தவிழா (இந்திரவிழா) நடைபெறுவதைக் குறிப்பிட்டுள்ளதால் சிலப்பதிகார காலத்திற்கு முன்னரே ஆண்டுத் தொடக்கம் கார்காலத்திலிருந்து இளவேனிற் காலத்திற்கு மாற்றப்பட்டிருக்கலாம்.

ஞாயிற்று (சூரிய அல்லது Solar) முறையிலான தமிழரின் காலக்கணிப்பீட்டை கில்பேட் சிலேட்டரின் (Gilbert Slater, 1864-1938) கருத்தும் உறுதிப்படுத்துகின்றது. அவர் “தமிழ் ஆண்டுத் தொகுப்பு முறை (பஞ்சாங்கங்கள்) ஆராய்ச்சிக்கு நல்ல தூண்டுதல் தரத்தக்கதாக உள்ளது. இம்முறையில் இரண்டு முறைகள் வழங்குகின்றன. ஒன்று சமயம் சார்ந்தது. மற்றொன்று வாழ்க்கைத்துறை சார்ந்தது.  சமயம் சார்ந்த ஆண்டுத் தொகுப்பு முறை தெலுங்குப் பஞ்சாங்கம் உட்பட எல்லா ஆசிய பஞ்சாங்கங்கள் போலவே மதிமுறை சார்ந்தது. இதுபற்றித் தனிப்படக்கூற எதுவுமில்லை.  ஆனால் சமயஞ்சாராத ஆண்டுத் தொகுப்பு ஞாயிற்றுச்சார்பானது மட்டுமன்றி முழு நிறை முறையிலேயே ஞாயிற்று வழியால் அமைவது.  அது மேனாட்டு முறைபோல் மதிய முறைப்படி முதலில் கணிக்கப்பட்ட மாதத்தை ஞாயிற்று முறைப்படி கணித்த ஆண்டுடன் பிற்காலத்தில் கொண்டு ஒட்டவைத்த முறையல்ல.  சற்றும் மட்டுமழுப்பல் இல்லாமல் அது வியக்கத்தக்க வகையில் முனைத்த ஞாயிற்று  முறையாய் உள்ளது.  ஏனெனில் அது ஒரு மாதத்தை இத்தனை முழு நாட்கள் என்று கூட வகுப்பதில்லை. வான் மண்டலாம் 12 மனையகங்களாகப் பிரிக்கப்பட்டள்ளன. ஞாயிறு ஒரு மனையகத்தில் புகு நேரம் காலையாயினும் சரி நண்பகலாயினும் சரி இரவாகினும் சரி அந்தக் கணக்கிலேயே மாதம் பிறக்கின்றது. நாட்களும் ஞாயிற்று எழுச்சியுடன் தொடங்குகின்றன. உலகில் இத்தனியுயர் சிறப்பிற்குரிய ஆண்டுக்கணிப்புமுறை திராவிடர்க்கு எப்பொழுது ஏற்பட்டது என்று எவரேனும் காலவரையறை கண்டுணர்ந்ததாக எனக்குத் தொpயவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

நடைமுறையில் சிலேட்டரின் கருத்து ஏற்கக்கூடியதாக உள்ளது. பிராமணியம் சார்ந்த நிகழ்வுகள் அனைத்தும் மதிசார்தவைகளாக அமைந்துள்ளன.  அமாவாசையிலிருந்து (பூர்வபட்ச) அல்லது பெளர்ணமியிலிருந்து (அபரபட்ச), பிரதமை, துதியை, திருதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, அட்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரியோதசி, சதுர்த்தசி எனும் திதிகளிலேயே சமயம் சார்ந்த நிகழ்வுகள் நிகழ்கின்றன.

மேலும் தைப்பூசம், மாசிமகம், பங்குனி உத்தரம், சித்திரைச் சித்திரை என ஒவ்வொரு மாதமும் பெளர்ணமியுடன் தொடர்புபட்ட நிகழ்வுகளும் சிவராத்திரி, நவராத்திரி, தீபாவளி எனும் சமய நிக்ழ்வுகளும் மதி சார்ந்தவையே.

எனினும் தைப்பொங்கல், புதுவருடம், ஆடிக்கூழ் போன்ற வைபவங்கள் ஒவ்வொருவருடைய வீடுகளிலும் பிராமணியத் தொடர்பற்றுக் கொண்டாடப் படுகின்றன. இவை முற்று முழுதாக சூரிய முறையில் அமைந்தவையாகும்.

கார்காலம் ஆண்டின் தொடக்கமாக இருந்திருக்கலாம் என்பதைத் தமிழிலிருந்து பிரிந்த பண்டைய சேரநாட்டு (கேரளம்) காலக்கணிப்பீடு வெளிப்படுத்துகின்றது. மலையாள மக்கள் சூரிய முறையில் அமைந்த மாதங்களையே பிரயோகிக்கினறனர். சூரியன் தனது வீடாகிய சிம்மவோரையில் சஞ்சரிக்கும் காலம் ஆண்டின் முதல் மாதமான சிம்மம் என அழைக்கப்படுகின்றது. அதேபோல தொடரும் ஓரைகள் மாதங்களின் பெயர்களைக் கொண்டுள்ளன. அதாவது  சிம்மம், கன்னி, துலாம், விருச்சகம், தனு, மகரம், கும்பம், மீனம், மேடம், இடபம், மிதுனம், கடகம் என்பன மலையாள மாதங்களாகும்.  எனினும் மலையாள மக்களின் முக்கிய விழாவான ஓணம் பண்டிகை சிம்ம (ஆவணி) மாதத்தில் சந்திரனடிப்படையில் நிகழ்கின்றது. அம்மாத்தில் வரும் அத்த நட்சத்திரத்தில் தொடங்கும் விழா சித்திரை, சுவாதி, விசாகம், அனுசம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம் எனத் தொடர்ந்து 10ம் நாள் விழா திருவோணம் நட்சத்திரத்தில் ஓணம் பண்டிகையாகக் கொண்டாடப்படும்.

மேலும் கார்காலம் என்பது ஆரியத் தொடர்புக்கு முந்தையது என்பதை பேராசிரியர் கைலாசபதியின் “ஒப்பியல் இலக்கியம்” எனும் நூலிலிருந்து அறியலாம்.  அவர் ஒப்பியல் ஆய்வு எங்ஙனம் அமையவேண்டும் என்பதை ஜோர்ஜ் எல். ஹார்ட் (George L. Hart) எனும் அமெரிக்க ஆய்வாளரின் “தமிழிலக்கியத்திலும் இந்தோ-ஆரிய இலக்கியத்திலும் கார்காலம்” எனும் ஒப்பியற் கட்டுரை மூலம் எடுத்துக்காட்டுகின்றார். தமிழ், பாகவதம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளிற் காணப்படும் கார் காலத்தைப்பற்றிய அகப்பொருட்களை ஒப்புநோக்கி அவற்றின் ஒற்றுமை வேற்றுமைக்குக் காரணங்களைக் காட்டி தமிழிலிருந்தே கார்காலம் பற்றிய கருத்து வடமொழிக்குச் சென்றிருக்கவேண்டும் எனத் தக்கபடி விளக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

எனவே மேற்கூறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் பின்வரும் விடயங்களை ஊகிக்கலாம்.

(1)    ஐரோப்பியர் 10 மாதங்களைப் 12 மாதங்களாக மாற்றியமைக்கு தமிழ் ஆண்டுக்கணிப்புமுறை காரணமாயிருக்கலாம்.

(2)    ஐரோப்பியர் ஆண்டின் தொடக்கத்தை மார்ச் மாதத்திலிருந்து ஜனவரி மாதத்திற்க்கு முன்தள்ளியமைக்கு தமிழர் கார்காலத்திலிந்து இளவேனிற் காலத்திற்கு முன்தள்ளியமை காரணமாயிருக்கலாம். (2 மாதம், 2 காலம்)

(3)    தொல்காப்பியக் காலம் 2ஆம் உரோமச் சக்கரவர்த்தியின் காலத்திற்கு முற்பட்டதாகும். அதாவது 2700 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும்.

(4)    பண்டைய தமிழர் சூரிய முறையில் அமைந்த ஆண்டு முறையைக் கொண்டிருந்தனர் (Solar Calendar).

(5)    12 மாதங்களை 12 ஓரைகள் குறிக்கும் வழக்கு தமிழிலிருந்து உலகம் அறிந்திருக்கலாம்.