கொரோனாவுக்கு 80 பேர் பலி, காட்டு மிருக விற்பனை தடை

Coronavirus

கொரோனா (corona) வைரஸுக்கு பலியானோர் தொகை தற்போது 80 ஆக உயர்ந்து உள்ளது. அனைத்து மரணங்களும் சீனாவிலேயே நிகழ்ந்து உள்ளன. சீனாவில் இந்த வைரஸின் பாதிப்புக்கு உள்ளானோர் தொகையும் 2,454 ஆக உயர்ந்து உள்ளது.
.
சீனாவுக்கு வெளியே இதுவரை எவரும் இந்த வைரஸ் காரணமாக பலியாகவில்லை. ஆனால் ஹாங் காங்கில் 6 பேர், Macau வில் 5 பேர், வடஅமெரிக்காவில் 5 பேர், அஸ்ரேலியாவில் 4 பேர், ஐரோப்பாவில் 6 பேர் உட்பட சுமார் 50 பேர் சீனாவுக்கு வெளியே இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
.
இந்த வைரஸை கொண்டோர் நோய்க்கான அறிகுறிகளை காண்பிக்க 1 முதல் 8 நாட்கள் எடுக்கும் என்று கூறப்படுகிறது. அந்த காலத்தில் வைரஸை கொண்டவர் ஏனையோருக்கு பரப்ப முடியும் என்றும் அதனால் இந்த வைரஸின் பரவலை தடுப்பது இலகுவான காரியம் அல்ல என்றும் கூறப்படுகிறது.
.
இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் காட்டு மிருகங்கள் விற்பனை செய்வதை சீனா தடை செய்துள்ளது. கொரோனா வைரஸ் ஆரம்பித்த இடம் என்று கருதப்படும் வூகான் நகரில் உள்ள Huanan Wholesale Seafood Market காட்டு மிருகங்கள் விற்பனை செய்யப்படும் இடமாகும்.
.
கொரோனா வைரஸும், SARS வைரஸும் வௌவாலில் காணப்படும் வைரஸ் என்று கூறப்படுகிறது. ஆனால் இது வௌவாலில் இருந்து நேரடியாக மனிதருக்கு தாவும் வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது. அதனால் இன்னோர் மிருகம் மூலமே இந்த வைரஸ் மனிதரை தாக்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அந்த இடை மிருகமாக பாம்பு இருந்திருக்கலாம் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன.
.
சீனாவை வடக்கு, தெற்கு பெரும் துண்டங்களாக பிரிக்கும் Yangtze ஆற்றோரம் உள்ள வூகான் நகரம் ஒரு முக்கிய பயணிகள் மையமும் ஆகும்.
.