சந்திரனில் மண் எடுக்க கலம் ஒன்றை ஏவியது சீனா

சந்திரனில் மண் எடுக்க கலம் ஒன்றை ஏவியது சீனா

சந்திர மேற்பரப்பின் சிறிதளவு மாதிரியை எடுத்துவர கலம் ஒன்றை இன்று சீனா ஏவி உள்ளது. Chang’e-5 என்ற இந்த கலத்தை Long March-5 என்ற ஏவுகணை காவி சென்றது. இது சீன நேரப்படி இன்று அதிகாலை 4:30 மணிக்கு ஏவப்பட்டது.

சீனாவின் இந்த செயற்பாடு வெற்றிகரமாக நிறைவுபெற்றால், சந்திரனில் இருந்து மாதிரியை எடுத்துவந்த 3 ஆவது நாடாக சீனா அமையும். அமெரிக்காவும், சோவியத்தும் ஏற்கனவே அவ்வாறு செய்துள்ளன.

ஏவப்பட்ட கலம் மட்டும் 3 பாகங்களை கொண்டது. Orbitor பாகம் சந்திரனை சுற்றிவரும். அதில் இருந்து வெளியேறும் lander மற்றும் ascender பாகங்கள் சந்திரனில் தரை இறங்கும். Lander சந்திர கற்களை எடுத்து ascender பாகத்துள் வைக்கும். பின் ascender மேலேறி orbitor உடன் இணையும். அவை இரண்டும் பின் சந்திர மாதிரியுடன் பூமிக்கு வரும்.

சந்திரனில் இறங்குவது மேலும் 8 நாட்களில் இடம்பெறும். அவை மீண்டும் பூமிக்கு 23 நாட்களில் வரும்.

உண்மையில் இந்த திட்டத்தின் நோக்கம் சந்திரனில் இறங்குவது, மீண்டும் சந்திரனில் இருந்து ஏவுவது, ஏவப்படும் கலம் சந்திரனை சுற்றும் கலத்துடன் இணைவது போன்ற நுட்பங்களை பரிசோதனை செய்வதே. இதன்போது பெறப்படும் அறிவுகள் சீனரை சந்திரனில் இறக்கி, பின் மீண்டும் பூமிக்கு எடுக்க வசதி செய்யும். சீனா சந்திரனுக்கு தமது விஞ்ஞானிகளை அனுப்ப திட்டமிட்டுள்ளது.