சனி சுனாமியின் வியத்தகு காரணி

AnakKrakatau

சனிக்கிழமை இந்தோனேசியாவில் இடம்பெற்ற சுனாமிக்கு சுமார் 280 பேர் இதுவரை பலியாகி உள்ளனர். வழமையாக சுனாமி ஆபத்துக்களை முன்னறிந்து எச்சரிக்கும் நவீன நுட்பங்கள் சனிக்கிழமை சுனாமியை முன்னறிந்து எச்சரிக்கவில்லை. உண்மையில் தற்போதைய முன்னறிவு நுட்பங்கள் சனிக்கிழமை இடம்பெற்ற வகை சுனாமியை அறியும் ஆற்றலை கொண்டிருக்கவில்லை.
.
பெரும்பாலான சுனாமிகள் கடலுள் அல்லது கடலை அண்டிய பகுதிகளில் ஏற்படும் நிலநடுக்கத்தினால் உருவாக்கப்படுபவையே. உலகம் எங்கும் நிலநடுக்கத்தை அறியும் வகையில் பல்லாயிரம் அதிர்வை அளக்கும் கருவிகள் வைக்கப்பட்டுள்ளன. ஒரு இடத்தில் நிலநடுக்கம் ஏற்படும்போது அப்பகுதி கருவிகள் அதிர்வை அளவீடு செய்து அறிவிக்கும்.
.
நிலநடுக்கத்தின் மையம், உக்கிரத்தன்மையின் அளவு ஆகிய காரணிகள் கொண்டு சுனாமியின் திசை, அளவு என்பன அறியப்படும்.
.
ஆனால் சனிக்கிழமை இடம்பெற்ற சுனாமி நிலநடுக்கத்தால் உருவானது அல்ல. கடலோரம் இருந்த Anak Krakatau என்ற தீவு எரிமலையின்  ஒரு பகுதி இடிந்து விழ, அது கடலின் கீழ் மண்சரிவை ஏற்படுத்த, அந்த தாக்கமே சுனாமியை உருவாக்கி உள்ளது. எரிமலையின் பகுதி இடிந்து வீழ்ந்ததையோ, அல்லது மண்சரிவு ஏற்பட்டதையோ அறியும் ஆற்றல் சுனாமி எச்சரிக்கை கருவிகளுக்கு இல்லை.
.
மேற்படி தீவு 1883 ஆம் ஆண்டு முதல் 1927 ஆம் ஆண்டு வரையான காலங்களில் இடம்பெற்ற எரிமலைக்கான காரணிகளால் உருவாக்கப்பட்டது. சனிக்கிழமை காலை 9:00 மணியளவில் எரிமலை உக்கிரம் அடைந்ததாகவும், சுனாமி 9:30 மணியளவில் ஆரம்பமானது என்றும் கூறப்பட்டுள்ளது.
.
சுனாமி அலை மணித்தியாலத்தில் சுமார் 800 km வேகத்தில் நகரக்கூடியது.

.