சீனா S-400, Su-35 கொள்வனவு, அமெரிக்கா தடை

S-400

சீனா ரஷ்யாவின் நவீன S-400 ஏவுகணைகளையும், பத்து Su-35 யுத்த விமானங்களையும் கொள்வனவு செய்ததை காரணம் கூறி, அமெரிக்காவின் CAATSA விதிகளின் கீழ், சீனா மீது சில தடைகளை விதித்துள்ளது அமெரிக்கா. பதிலுக்கு தாமும் அமெரிக்காவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கூறியுள்ளனர் சீன அதிகாரிகள்.
.
Equipment Development Department என்ற சீன இராணுவ தளபாட கொள்வனவு திணைக்களம், அதன் அதிகாரி Li Shangfu உட்பட சிலர் மீது அமெரிக்கா இந்த தடையை விதித்துள்ளது.
.
உண்மையில் CAATSA விதிகள் (Countering America’s Adversaries Through Sanctions Act) 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதமே உருவாக்கப்பட்டிருந்தது. ஆனால் சீனாவின் $3 பில்லியன் பெறுமதியான S-400, மற்றும் $2 பில்லியன் பெறுமதியான Su-35 கொள்வனவுகள் 2015 ஆம் ஆண்டிலேயே முற்றாகி இருந்தன. அதனால் அமெரிக்கா முன்னைய கொள்வனவை பின்னைய விதிமுறையால் தண்டித்து உள்ளது.
.
2015 ஆம் ஆண்டு கொள்வனவுகள் செய்யப்பட்டிருந்தாலும் இந்த வருடமே மேற்படி S-400 ஏவுகணைகளும், Su-35 விமானங்களும் சீனாவின் கைகளுக்கு வந்துள்ளன.
.
அதேவேளை இந்தியாவும் ரஷ்யாவிடம் இருந்து S-400 ஏவுகணைகளை கொள்வனவு செய்யவுள்ளது. இந்த கொள்வனவு வரும் அக்டோபர் மாதம் 5 ஆம் திகதி மோதி-பூட்டின் சந்திப்பின் போது உறுதி செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த கொள்வனவு காரணமாக அமெரிக்கா இந்தியாவை தண்டிக்குமா என்பது கோள்விக்குறியே. வேகமாக வளரும் சீனாவுக்கு எதிரா செயல்படவும் இந்தியாவின் உறவை விரும்புகிறது அமெரிக்கா.
.
NATO நாடான துருக்கியும் S-400 ஏவுகணைகளை கொள்வனவு செய்யவுள்ளது. அதையும் அமெரிக்கா கடுமையாக எதிர்த்து வருகிறது.

.