சீன அணைக்கட்டுள் ஆபத்தான அளவில் நீர்த்தேக்கம்

சீன அணைக்கட்டுள் ஆபத்தான அளவில் நீர்த்தேக்கம்

உலகிலேயே மிகப்பெரிய நீர்மின் அணைக்கட்டு சீனாவின் Three Gorges Dam என்ற அணைக்கட்டு. இது Yangtze ஆற்றின் குறுக்கே, வூஹான் நகருக்கு மேற்கே கட்டப்பட்டுள்ளது. சீனாவின் மத்திய பகுதிகளில் இவ்வாண்டு பொழியும் அதீத மழையால் இந்த அணைக்கட்டு நிரம்பி, அணைக்கட்டில் மிகையான அழுத்தத்தை செலுத்துகிறது.

2008 ஆம் ஆண்டு சேவைக்கு வந்த இந்த நீர்மின் அணையில் 34 மின் பிறப்பாக்கிகள் உள்ளன. அவை 22,500 megawatt மின்னை உற்பத்தி செய்கின்றன. இந்த அணைக்கட்டின் ஆற்றுக்கு குறுக்கான நீளம் 2.309 km.

இந்த அணைக்கட்டு கொள்ளக்கூடிய நீரின் அதிக உயரம் 175 மீட்டர். தற்போது நீரின் உயரம் 164.18 மீட்டர் ஆக உள்ளது. இதற்கு முன், 2012 ஆம் ஆண்டு தேங்கிய நீரின் உயரம் 163.11 மீட்டர் ஆக இருந்தது.

இந்த அணையை நோக்கி செக்கன் ஒன்றுக்கு சுமார் 55,000 சதுர மீட்டர் நீர் பாய்கிறது. ஆனால் கீழே உள்ள நகரங்களின் பாதுகாப்பு கருதி செக்கன் ஒன்றுக்கு 38,000 சதுர மீட்டர் நீரே வெளியேற்றப்படுகிறது. அதனால் தேங்கும் நீரின் அளவு சுமார் 17,000 சதுர மீட்டரால் அதிகரிக்கிறது.

இந்த அணைக்கட்டுக்கு ஆபத்து ஒன்று வருமானால் அது மிகக்கொடூரமானதாக இருக்கும்.

இந்த அணைக்கட்டை அண்டிய பகுதியில் சுமார் 5 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். இந்த ஆற்றுவழியே உள்ள அடுத்த பெரிய நகரமான வூகானில் (Wuhan) சனத்தொகை சுமார் 11 மில்லியன். ஆற்றுவழியே உள்ள அடுத்த பெரிய நகரமான நான்ஜிங்கில் (NanJing) சனத்தொகை 8.5 மில்லியன். இந்த ஆறு ஷாங்காய் நகருக்கு வடக்காக கடலுள் வீழ்கிறது.

சீனாவின் ஆறுகள் மழை காலங்களில் மக்களை அழிப்பதை தடுக்கவும், மின் உற்பத்தி செய்யவும், விவசாயம் செய்யவும் பல அணைகள் கட்டப்பட்டு உள்ளன. சீனாவில் சிறிது, பெரிதாக சுமார் 87,000 அணைகள் உள்ளன.

சீனாவின் துயரம் என்று அழைக்கப்படும் மஞ்சள் ஆறு (Yellow River) 1931 ஆம் ஆண்டு பெருக்கெடுத்த காரணத்தால் சுமார் 140,000 பேர் பலியாகி இருந்தனர்.