துருக்கி நாணயம் பாரிய வீழ்ச்சி

Turkey

துருக்கி (Turkey) நாணயமான லிரா (lira) இன்று நாணயமாற்று சந்தையில் பாரிய வீழ்ச்சி அடைந்துள்ளது. துருக்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ரம்புக்கும் இடையே இடம்பெற்றுவரும் முறுகல் நிலை காரணமாகவே துருக்கியின் நாணயம் வீழ்ச்சி அடைந்துள்ளது. துருக்கியில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் அலுமியத்துக்கு 20% மேலதிக இறக்குமதி வரியும், இரும்புக்கு 50% மேலதிக வரியும் அறவிடப்போவதாக ரம்ப் கூறிய பின்னரே லிரா வீழ்ந்துள்ளது.
.
Andrew Brunson என்ற அமெரிக்க கிறீஸ்தவ ஆயரை துருக்கி 2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற தோற்றுப்போன இராணுவ புரட்சியின் போது கைது செய்து வைத்துள்ளது. அவர் துருக்கிக்கு எதிரான பயங்கரவாதிகளுக்கு உதவினார் என்று குற்றம் சாட்டுகிறது துருக்கி. அந்த குற்றசாட்டை மறுக்கும் அமெரிக்கா, ஆயரை விடுவிக்க கேட்டுள்ளது. துருக்கி ஆயரை விடுதலை செய்ய மறுத்தபடியாலேயே புதிய இறக்குமதி வரிகள் நடைமுறை செய்யப்பட்டுள்ளன.
.
துருக்கி ஏற்றுமதி செய்யும் இரும்புகளின் 13% அமெரிக்காவுக்கு செல்கின்றது.
.
இந்த கிழமை மட்டும் லிரா அமெரிக்க டாலருக்கு எதிராக 30% பெறுமதியை இழந்துள்ளது. அத்துடன் கடந்த ஒருவரிடத்தில் லிரா 50% பெறுமதியை இழந்துள்ளது.
.
இன்று வெள்ளிக்கிழமை ஒரு அமெரிக்க டாலருக்கு 6.41 லிராக்களை பெறக்கூடியதாக இருந்துள்ளது. ஆனால் சுமார் ஒரு வருடங்களுக்கு முன்னர் அமெரிக்க டாலர் ஒன்றுக்கு 3.33 லிராக்களை மட்டுமே பெறக்கூடியதாக இருந்துள்ளது.
.