பாகிஸ்தானில் 30% விமானிகள் போலி விமானி பத்திரங்களுடன்

PIA_Pakistan

பாகிஸ்தானில் விமானிகளாக பணியாற்றும் விமானிகளில் சுமார் 30% விமானிகளின் விமானி பாத்திரங்கள் (licenses) பொய்யானவை என்று அந்நாட்டின் விமான சேவைகள் அமைச்சர் Ghulam Sarwar Khan புதன்கிழமை கூறி உள்ளார். பாகிஸ்தானின் பெரிய விமான சேவையான Pakisthan International Airlines (PIA) விமானிகளும் போலி அனுமதிப்பத்திரம் கொண்டோருள் அடங்குவர்.
.
பாகிஸ்தானில் மொத்தம் 860 விமானிகள் உள்ளதாகவும், அவர்களில் 262 விமானிகள் முறைப்படியான விமானி பத்திரங்களை கொண்டிருக்கவில்லை என்றும் அமைச்சர் கூறி உள்ளார். போலி விமானிகளுக்கான சோதனைகள் (exams) வரும்போது வாடகைக்கு அமர்த்தப்படும் வேறு விமானிகள் பங்கு கொள்கிறார்கள் என்றும் கூறப்பட்டு உள்ளது.
.
PIA போலி பத்திரங்கள் கொண்ட தனது விமானிகளை உடனடியாக இடைநிறுத்தி உள்ளதாக கூறியுள்ளது.
.
மே மாதம் 22 ஆம் திகதி PIA யின் பயணிகள் விமானம் ஒன்று (Flight PK 8303) லாகூர் பகுதியில் வீழ்ந்ததில் 97 பேர் பலியாகி இருந்தனர். அந்த விபத்து தொடர்பான விசாரணையே மேற்படி உண்மையை வெளிப்படுத்தி உள்ளது. வீழ்ந்த விமானத்தின் விமானிகள் போலி பத்திரங்களை கொண்டிருந்தனரா என்பதை அமைச்சர் வெளிப்படுத்தவில்லை.
.
மேற்படி விமான விபத்துக்கு சற்று முன் விமான நிலைய கண்காணிப்பு கோபுரம் (control tower) விமானம் மிகையான உயரத்தில் உள்ளதாகவும், தரை இறங்குவதற்கு ஏற்ப சக்கரங்கள் (landing gear) வெளியே வரவில்லை என்றும் கூறி உள்ளது. அதனால் தரை  இறங்களை தவிர்க்குமாறும் கோபுரம் கூறி உள்ளது. ஆனாலும் அந்த கட்டளைகளுக்கு செவிமடுக்காத விமானிகள் தரை இறங்க முற்பட்டு உள்ளனர்.
.
சக்கரங்கள் வெளியே இல்லாத நிலையில் விமானத்தின் இயந்திரங்கள் ஓடுபாதையில் உரசி பாதிப்பு அடைந்து உள்ளன. உரசலில் பின் விமானம் மேலே சென்று மீண்டும் தரை இறங்க முனைந்தாலும், இயந்திரங்கள் பாதிப்பு அடைந்த நிலையில் விமானம் குடியிருப்பு பகுதியில் வீழ்ந்து உள்ளது.
.