பிரித்தானிய கழிவுகளை இலங்கை திருப்பி அனுப்புகிறது

பிரித்தானிய கழிவுகளை இலங்கை திருப்பி அனுப்புகிறது

பிரித்தானியாவில் இருந்து ​இலங்கைக்கு அனுப்பப்பட்ட ஆபத்தான வைத்தியசாலை கழிவுகளை இலங்கை திருப்பி பிரித்தானியா அனுப்புகிறது. நேற்று சனிக்கிழமை 21 கொள்கலங்கள் (containers) திருப்பி அனுப்பப்பட்டு உள்ளன என்கிறது இலங்கை அரசு.

2017 ஆம் ஆண்டு செம்டம்பர் மாதம் முதல் 2018 ஆம் ஆண்டு மார்ச் வரை மொத்தம் 263 கொள்கலங்கள் தனியார் நிறுவனம் ஒன்று மூலம் இலங்கைக்கு எடுத்துவரப்பட்டு இருந்தன. அவற்றுள் சில வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு இருந்தாலும் பெரும்பாலானவை இலங்கையில் வைக்கப்பட்டு இருந்தன.

கைவிடப்பட்ட கொள்கலங்கள் கொழும்பு துறைமுகத்துக்கு வெளியே உள்ள சுதந்திர வர்த்தக வலயங்களில் உள்ளதாக கூறப்படுகிறது. இவற்றை இறக்குமதி செய்தோர் மீது இலங்கை சட்ட நடவடிக்கை எடுக்கிறது.

மேற்படி கொள்கலங்களுள் பாவித்த படுக்கை மெத்தைகள், நிலவிரிப்புகள் (carpet) என்பன உள்ளதாகவே பதியப்பட்டு இருந்தன. ஆனால் உண்மையில் அவற்றுள் பெருமளவு ஆபத்தான வைத்தியசாலை கழிவுகள் இருந்துள்ளன. இவ்வாறு ஆபத்து மிக்க கழிவுகளை அனுப்புவது ஐரோப்பிய சட்டத்துக்கு முரணானது.

ஜனவரி மாதம் மலேசியாவும் ஆபத்தான கழிவுகளை கொண்டிருந்த 42 கொள்கலங்களை பிரித்தானியாவுக்கு திருப்பி அனுப்பி இருந்தது.