பிரித்தானிய பாதுகாப்பு பேச்சிலிருந்து பிரான்ஸ் வெளியேற்றம்

பிரித்தானிய பாதுகாப்பு பேச்சிலிருந்து பிரான்ஸ் வெளியேற்றம்

அமெரிக்கா பிரித்தானியாவுடனும், அஸ்ரேலியாவுடனும் இரகசியமாக செய்து கொண்ட AUKUS கூட்டின் பின் பிரான்ஸ் தொடர்ந்தும் வெறுப்பில் உள்ளது.

இந்த கிழமை பிரித்தானியவுடன் செய்துகொள்ளவிருந்த பாதுகாப்பு தொடர்பான பேச்சுக்களை பிரான்ஸ் இடைநிறுத்தி உள்ளது. பிரித்தானிய பிரதமர் Boris Johnson பிரான்ஸ் AUKUS கூட்டையிட்டு பயம் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை என்று கூறியிருந்தாலும், பிரான்ஸ் பெரும் விசனத்தில் உள்ளது.

பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் Ben Wallace உடன் பிரான்சின் பாதுகாப்பு அமைச்சர் Florence Parly செய்யவிருந்த பேச்சே இடைநிறுத்தப்பட்டு உள்ளது.

அஸ்ரேலியா 12 நீர்மூழ்கிகளை பிரான்சிடம் இருந்து கொள்வனவு செய்ய இருந்திருந்தாலும், AUKUS கூட்டின் பின் அந்த கொள்வனவு நீக்கப்பட்டு, பதிலாக அமெரிக்காவிடம் இருந்து நீர்மூழ்கிகளை அஸ்ரேலியா கொள்வனவு செய்யவுள்ளது.

ஏற்கனவே அஸ்ரேலியாவுக்கும், அமெரிக்காவுக்குமான தனது தூதுவர்களை பிரான்ஸ் திருப்பி அழைத்து உள்ளது. இரண்டாம் உலக யுத்தத்தின் பின் மேற்கு நாடு ஒன்று நேச நாட்டு தூதுவரை திருப்பி அழைப்பது இதுவே முதல் தடவை.

AUKUS கூட்டமைப்பு செய்தியை பிரான்ஸ் கசிந்த செய்திகள் மூலமே அறிந்து இருந்தது.

தற்போது 6 நாடுகளிடம் அணுமின் மூலம் இயங்கும் நீர்மூழ்கிகள் உள்ளன. அமெரிக்கா (14 அணுமின் நீர்மூழ்கிகள்), ரஷ்யா (11), சீனா (6), பிரித்தானியா (4), பிரான்ஸ் (4), இந்தியா (1) ஆகியவையே அந்த நாடுகள். அஸ்ரேலியாவும் அணுமின் நீர்மூழ்கி பெற்றால், அது 7 ஆவது நாடாகும்.