முன்னாள் பெரு ஜனாதிபதி சுட்டு தற்கொலை

Peru

தென் அமெரிக்க நாடான பெருவின் (Peru) முன்னாள் ஜனாதிபதி Alan Garcia தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துள்ளார். ஊழல் தொடர்பாக இவரை கைது செய்ய அதிகாரிகள் இவரின் வீட்டுக்கு சென்றபோதே முன்னாள் ஜனாதிபதி தற்கொலை செய்துள்ளார்.
.
அதிகாரிகள் கைது செய்ய வந்ததை அறிந்த Alan Gracia ஒரு தொலைபேசி தொடர்பு எடுக்க விரும்புவதாக கூறி தனது வீட்டு அறை ஒன்றுள் சென்று, கதவை பூட்டிவிட்டு, துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துள்ளார்.
.
1949 ஆம் ஆண்டு பிறந்த Alan Garcia 1985 முதல் 1990 வரையான காலத்திலும், பின் 2006 முதல் 2011 வரையான காலத்திலும் பெரு நாட்டின் ஜனாதிபதியாக பதவி வகித்தவர்.
.
இவர் Odebrecht என்ற பிரேசில் நாட்டு கட்டுமான நிறுவனத்திடம் இருந்து $30 மில்லியன் இலஞ்சம் பெற்றார் என்றே குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அந்த நிறுவனமும் தாம் இலஞ்சம் வழங்கியதாக கூறி உள்ளது.
.
பெருவின் முன்னாள் ஜனாதிபதி Alberto Fujimori ஏற்கனவே ஊழல் காரணமாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். மேலும் 4 முன்னாள் ஜனாதிபதிகள் விசாரணையில் உள்ளனர். தற்போதைய எதிர்க்கட்சி தலைவர் Keiko Fujimori (Alberto வின் மகள்) தற்போது $1.2 மில்லியன் ஊழல் குற்றச்சாட்டில் உள்ளார்.

.