வடகொரியா விடயத்தில் குழம்பியுள்ள அமெரிக்கா

வழக்கமான சர்வதேச இராசதந்திர விதிமுறைகளுக்கு அப்பால் முரண்டுபட்டு செயல்படும் வடகொரியாவை எப்படி கையாள்வது என்று தெரியாமல் குழம்பியுள்ளது அமெரிக்கா. பகிரங்கமாக வடகொரியாவின் நடவடிக்கைகளை பலமாக சாடிவரும் அமெரிக்கா, தாம் அளவுக்கு அதிகம் வடகொரியாவை சீண்டி தேவையற்ற யுத்தம் ஒன்றை ஆரம்பித்து விடுவோமோ என்றும் கவலை கொள்கிறது.

ஒருபுறம் அணுகுண்டு வீசக்கூடிய B-52 மற்றும் B-2 விமானங்களையும் அதிநவீன F-22 யுத்த விமாங்களையும் தென்கொரியா மேலாக அண்மையில் பறக்க விட்டாலும், மறுபுறம் கொரிய குடா பகுதியில் தமது இராணுவ நடவடிக்கைகளை குறைக்கவும் தொடங்கியுள்ளது அமெரிக்கா.

அமெரிக்க பென்ரகன் (Pentagon) செயலாளர் George Little அண்மையில் தாம் கொரியன் குடாவில் ‘temperature’ குறைக்க விரும்புவதாக கூறியுள்ளார். அதேவேளை அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் Chuck Hagel தாம் ‘complicated, combustible’ சூழ்நிலையை உருவாக்க விரும்பவில்லை எனவும் கூறியுள்ளார்.

அத்துடன் தாம் நடமாடும் ஏவுகணை பாதுகாப்பு நிலைகளை (missile defense system) குவாம் (Guam) இலும் நிறுவ நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக அமெரிக்கா புதன்கிழமை (3/4/2012) கூறியுள்ளது. ஏற்கனவே இவ்வகையான சுமார் 14 ஏவுகணை பாதுகாப்பு நிலைகளை அலாஸ்காவிலும் அமெரிக்கா நிறுவியுள்ளது.

ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் யுத்தங்களின் பின் இன்னொரு யுத்தத்தை அமெரிக்கா இப்போதைக்கு நிச்சயம் விரும்பாது.