1961 அணு குண்டுவீச்சு வீடியோவை வெளியிட்டது ரஷ்யா

1961 அணு குண்டுவீச்சு வீடியோவை வெளியிட்டது ரஷ்யா

சோவியத் யூனியனின் RDS-220 அணு குண்டே மனிதத்தால் வெடிக்கவைக்கப்பட்ட மிகப்பெரிய குண்டு. இதன் வெடிப்பு 50 மெகா தொன் (50,000,000 தொன்) TNT வெடிமருந்துக்கு நிகரானது. இந்த குண்டு ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய இடங்களில் வீசப்பட்ட இரண்டு குண்டுகளின் மொத்த வலுவிலும் 1,400 மடங்கு பெரியது. ஹிரோஷிமா குண்டு 15 கிலோ தொன் (15,000 தொன்) TNT க்கும், நாகசாகி குண்டு 21 கிலோ தொன் TNT க்கும் நிகரானவை.

இந்த பரிசோதனையை சோவியத் 1961 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30 ஆம் திகதி ஆர்டிக் சமுத்திரத்தை அண்டிய பகுதியில் செய்து இருந்தது. ஆனால் அது தொடர்பாக வீடியோவையோ, படங்களையோ சோவியத் அக்காலத்தில் வெளியிட்டு இருக்கவில்லை. அந்த வீடியோவையே கடந்த ஆகஸ்ட் 20 ஆம் திகதி ரஷ்யா வெளியிட்டு உள்ளது.

குண்டு வெடித்த பொழுது உருவான வெளிச்சம் சுமார் 1,000 km தூரத்திலும் தெரிந்ததாம். ஒரு விமானம் குண்டை காவி செல்ல, இன்னோர் விமானம் படப்பிடிப்புக்கு சென்றுள்ளது. இந்த இரண்டு விமானங்களும் ஆபத்தில் இருந்து தப்புவதற்காக நிகழ்தகவு 50% ஆக மட்டுமே இருந்ததாம். ஆனாலும் இரண்டு விமானங்களும் தப்பி உள்ளன.

ரஷ்யா வெளியிட்ட வீடியோ பழைய குண்டுவெடிப்பு காட்சியை கொண்டிருந்தாலும் இந்த 40 நிமிட வீடியோ அவர்களின் 75 ஆவது அணு ஆய்வு ஆண்டு நிறைவையும் கொண்டாடும் நோக்கில் தயாரிக்கப்பட்டது..

இந்த குண்டு 25,000 kg எடையை கொண்டது. இதன் நீளம் 8 மீட்டர், விட்டம் 2.1 மீட்டர்.

https://www.youtube.com/watch?v=nbC7BxXtOlo