2011 முதல் கட்டாரில் 6,750 வெளிநாட்டு ஊழியர் மரணம்

2011 முதல் கட்டாரில் 6,750 வெளிநாட்டு ஊழியர் மரணம்

2011ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரையான காலத்தில் குறைந்தது 6,750 வெளிநாட்டு ஊழியர்கள் கட்டாரில் மரணமாகி உள்ளதாக Guardian தொகுத்த தரவுகள் கூறுகின்றன. இவர்களில் பலர் FIFA World Cup 2022 கால்பந்தாட்ட போட்டிகளுக்கான திட்டங்களில் பணிபுரிந்த இலங்கை, இந்தியா, பங்களாதேசம், நேபாளம், பாகிஸ்தான் ஆகிய நாட்டவரே.

பலியானோர் தொகையுள் 557 இலங்கையர், 2,711 இந்தியர், 1,641 நேபாளத்தினர், 1,018 பங்களாதேசத்தினர், 824 பாகிஸ்தானியர் ஆகியோரும் அடங்குவர். பிலிப்பீன், கென்யா போன்ற ஏனைய நாட்டவரின் மரணங்கள் இந்த கணிப்பில் உள்ளடக்கப்படவில்லை.

பெரும்பாலானோரின் மரணங்கள் இயற்கை மரணங்கள் என்று மரண அறிக்கைகள் கூறி இருந்தாலும், தொழில் செய்யும் இடங்களில் இடம்பெற்ற விபத்துக்களே பிரதான காரணி என்று கருதப்படுகிறது.

FIFA மைதான கட்டுமான வேலை இடத்தில மட்டும் 37 பலியாகி உள்ளனர். ஆனால் அதில் 34 பேரின் மரணம் “non-work related” என்று குறிப்பிடப்பட்டு உள்ளதாம்.

2019ம் ஆண்டு கட்டாரில் வீசிய கடுமையான வெப்பமும் பல மரணங்களுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

2020ம் ஆண்டுவரை கட்டாரில் நடைமுறையில் இருந்த kafala முறையும் ஊழியர்களுக்கு பாதகமாக இருந்ததாக கூறப்படுகிறது. Kafala என்ற இடைத்தரகராக செயற்படும் வேலைவாய்ப்பு முகவர்கள் ஊழியரின் நலன்களை கடுமையாக மட்டுப்படுத்தி இருந்தனர். அம்முறை 2020ம் ஆண்டின் பின் நிறுத்தப்பட்டு உள்ளது.