24,116 கொள்கலன் காவும் கப்பல் MSC Tessa

24,116 கொள்கலன் காவும் கப்பல் MSC Tessa

உலகத்திலேயே மிக பெரிய கொள்கலன் கப்பலான MSC Tessa ஆகஸ்ட் 1ம் திகதி மிதக்க விடப்பட்டு உள்ளது. விரைவில் சேவைக்கு வரவுள்ள இந்த கப்பல் 24,116 இருபது அடி நீள கொள்கலன்களை (TEU, Twenty-foot Equivalent Unit) காவ வல்லது. அதனால் இதுவே உலகத்தில் அதிக கொள்கலன்களை காவ வல்ல கப்பல் ஆகிறது.

இந்த கப்பல் சுவிஸ் நாட்டை தளமாக கொண்ட MSC (Mediterranean Shipping Company) என்ற நிறுவனத்துக்காக சீனாவின் CSSC (China State Shipbuilding Company) என்ற கப்பல் கட்டும் நிறுவனத்தால் கட்டப்பட்டது. இதன் நீளம் 400 மீட்டர், அகலம் 61.5 மீட்டர்.

இதில் 25 அடுக்குகளில் கொள்கலன்கள் வைக்கப்படும். இதே அளவிலான மேலும் 3 கப்பல்கள் MSC நிறுவனத்துக்காக கட்டப்படுகின்றன.

இதற்கு முன் CSSC கட்டிய Ever Alot என்ற கப்பல் 24,004 கொள்கலன்களை காவும் வல்லமையை கொண்டு இருந்தது. அந்த கப்பல் தாய்வானின் Evergreen நிறுவனத்துக்கு சொந்தமானது.

இதுவரை 10,000 முதல் 20,000 கொள்கலன்களை காவும் கப்பல்கள் Very Large Container Ship (VLCS) என்று அழைக்கப்பட்டன. அதற்கும் மேலான தொகையில் கொள்கலன்களை காவும் கப்பல்கள் Ultra Large Container Ship (ULCS) என்று அழைக்கப்படும்.