Chip போட்டி உக்கிரம், சீனா $143 பில்லியன் முதலீடு

Chip போட்டி உக்கிரம், சீனா $143 பில்லியன் முதலீடு

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான கணனி chip (computer microchip) போட்டி மேலும் உக்கிரம் அடைகிறது. சீன chip துறைக்கு $143 பில்லியன் உதவியை வழங்க சீனா முன்வந்துள்ளது. இத்தொகை அமெரிக்க சனாதிபதி பைடென் ஆகஸ்ட் மாதம் அமெரிக்க chip நிறுவனங்களுக்கு வழங்கிய $52 பில்லியன் உதவியிலும் மிக அதிகமானது.

இதுவரை சீன தொழில்நுட்ப நிறுவனங்கள் அமெரிக்காவின் Intel, AMD போன்ற நிறுவனங்கள் தயாரிக்கும் chips மற்றும் Nvidia போன்ற நிறுவனங்கள் தயாரிக்கும் chip தயாரிக்கும் இயந்திரங்களை (fabrication machines) கொள்வனவு செய்து வந்தன. ஆனால் வேகமான சீனாவின் வளர்ச்சியை நசுக்கும் நோக்கில் இந்த ஆண்டு அக்டோபர் 7ம் திகதி முதல் அமெரிக்க சீனாவுக்கான மேற்படி விற்பனைகளை தடை செய்ய ஆரம்பித்தது. அத்துடன் அமெரிக்கர் சீனர் உட்பட அமெரிக்கர் சீன தொழில்நுட்ப ஆய்வுகளில் ஈடுபடுவதும் தடை செய்யப்பட்டது.

மேலும் நெதர்லாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளையும் தொழிநுட்பத்தில் சீனாவுக்கு உதவ வேண்டாம் என்று தாம் கேட்டுள்ளதாக வெள்ளைமாளிகை பேச்சாளர் Jake Sullivan திங்கள் கூறியிருந்தார்.

அமெரிக்காவின் தடைகளை எதிர்த்து சீனா WTO அமைப்பில் நேற்று திங்கள் வழக்கு தாக்கல் செய்துள்ளது. அதேநேரம் அமெரிக்காவில் இருந்து தொழில்நுட்ப சுதந்திரம் அடையும் நோக்கில் உள்ளூர் ஆய்வுகளுக்கும், உற்பத்திகளுக்கும் தேவையான உதவிகளையும் செய்ய முன்வந்துள்ளது சீனா.

சீனாவின் NAURA Technology Group, Advanced Micro-Fabrication Equipment Inc China, Kingsemi போன்ற நிறுவனங்கள் சீனாவின் உதவியால் நன்மை பெறும்.

அமெரிக்க chip நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் சீன நிறுவனங்கள் தற்போது மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளன. உதாரணமாக சீனாவின் NAURA என்ற நிறுவனம் 28 நனோமீட்டர் (manometer) அளவிலான chip களையே தயாரிக்கும் வல்லமையை தற்போது கொண்டுள்ளது. ஆனால் அமெரிக்க நிறுவனங்கள் 3 நனோமீட்டர் அளவிலான சிறிய chip களை தற்போது தயாரிக்கும். (ஒரு தலை முடியின் தடிப்பு சுமார் 90,000 நனோமீட்டர்).

1987ம் ஆண்டில் மேற்கு நாடுகள் 800 நனோமீட்டர் அளவிலான chip ஐ தயாரித்தன. 1999ம் ஆண்டில் 180 நனோமீட்டர் அளவிலான chip தயாரிக்கப்பட்டது. 2009ம் ஆண்டில் 32 நனோமீட்டர் அளவிலான chip தயாரிக்கப்பட்டது. மேற்கு நாடுகள் தற்போது 3 நனோமீட்டர் அளவிலான chip ஐ தயாரிக்க முனைகின்றன. இந்த அறிவு சீனா செல்வதை தடுக்க முனைகிறது அமெரிக்கா.