Forbes 2021 கணிப்பில் 2,755 பெரும் செல்வந்தர்

Forbes 2021 கணிப்பில் 2,755 பெரும் செல்வந்தர்

உலகில் தற்போது 2,755 பேர் ஒரு பில்லியன் டாலருக்கும் அதிகமான சொத்தை கொண்டுள்ளனர். இவர்களிடம் மொத்தம் $13.1 டிரில்லியன் ($13,100 பில்லியன்) சொத்துக்கள் உள்ளன. இந்த ஆண்டு புதிதாக 493 பேர் பில்லியன் சொத்துடையோர் பட்டியலில் இணைந்து உள்ளனர்.

அமெரிக்காவின் Forbes நிறுவனம் வெளியிட்டு உள்ள கணிப்பின்படி Amazon நிறுவனத்தை ஆரம்பித்த Jeff Bezos உலக அளவில் முதலாம் இடத்தில் உள்ளார். அமெரிக்கரான இவரிடம் சுமார் $177 billion ($177,000,000,000) சொத்துக்கள் உள்ளதாக கணிக்கப்பட்டு உள்ளது. அதில் பெருமளவு Amazon நிறுவனத்தின் பங்கில் உள்ளது.

இரண்டாம் இடத்தில் Tesla என்ற மின் கார் (electric car) தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த Elon Musk உள்ளார். இவரிடம் சுமார் $151 பில்லியன் சொத்து உள்ளது. அந்த சொத்தின் பெரும் பங்கு Tesla பங்கில் உள்ளது. இவரும் ஒரு அமெரிக்கர். கடந்த ஆண்டு 31ம் இடத்தில் இருந்த இவர் இந்த ஆண்டு 2ம் இடத்துக்கு சென்றுள்ளார்.

பிரான்ஸை வதிவிடமாக கொண்ட Bernard Arnault குடும்பத்திடம் $150 பில்லியன் சொத்துக்கள் உள்ளன. இவர்கள் 3ம் இடத்தில் உள்ளனர்.

நீண்ட காலம் 1ம் இடத்தில் இருந்த Microsoft நிறுவனத்தை ஆரம்பித்த Bill Gate தற்போது 4ம் இடத்தில் உள்ளார். இவரிடம் சுமார் $124 பில்லியன் பெறுமதியான சொத்துக்கள் உண்டு.

Facebook நிறுவனத்தை ஆரம்பித்த Mark Zuckerberg தன்வசம் $97 பில்லியன் சொத்தை கொண்டுள்ளார்.

உலகின் 10வது செல்வந்தராக இந்தியாவின் முகேஷ் அம்பானி உள்ளார். இவரிடம் $84.5 பில்லியன் சொத்துக்கள் உள்ளன.

அமெரிக்காவில் 724 பேர் பில்லியன் டாலருக்கும் அதிகமான சொத்தை கொண்டுள்ளனர். இங்கு கடந்த ஆண்டு 614 பேர் பில்லியன் டாலருக்கும் அதிகமான சொத்தை கொண்டிருந்தனர்.

இந்த ஆண்டு சீனாவில் 698 பேர் குறைந்தது ஒரு பில்லியன் டாலர் சொத்தை கொண்டுள்ளனர். கடந்த ஆண்டு இங்கு 388 பேர் மட்டுமே பில்லியன் டாலர் சொத்தை கொண்டிருந்தனர்.

1987ம் ஆண்டு உலகின் பெரிய செல்வந்தராக இருந்த Yoshiaki Tsutsumi எவரிடம் அப்போது $20 பில்லியன் மட்டுமே இருந்தது.