Google மீது அமெரிக்கா antitrust வழக்கு தாக்கல்

Google மீது அமெரிக்கா antitrust வழக்கு தாக்கல்

உலகின் மிகப்பெரிய இணைய தேடுதல் நிறுவனமான Google மீது அமெரிக்க மத்திய அரசும், 11 மாநிலங்களும் antitrust என்ற வழக்கை இன்று தாக்கல் செய்துள்ளன. பொதுமக்களின் வர்த்தக நலன்களுக்கு முரணாக தனியார் நிறுவனம் வளர்ந்து மக்களை கட்டுப்படுத்துவதை தவிர்க்கும் நோக்கில் அமெரிக்காவில் இயற்றப்பட்டதே antitrust சட்டம்.

உலகின் சுமார் 90% இணைய தேடுதல் Google மூலமே செய்யப்படுகிறது. அந்த ஆளுமையை பயன்படுத்தி Google தனக்கு போட்டியாக உள்ள வர்த்தகங்களை கட்டுப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

Google ஐ பயன்படுத்தி ஒருவர் தேடுதல் ஒன்றை செய்யும்போது Google தேடுதல் (search engine) பொருத்தமான இணையங்களை வரிசைப்படுத்தும். ஆனால் இந்த வரிசையில் முன்னுக்கு இருப்பது Google க்கு பணம் செலுத்தும் நிறுவனங்களே. அது மட்டுமன்றி தொடர்ந்து வரும் இணையங்களும் மறைமுகமாக Google க்கு விளம்பர கட்டணம் செலுத்தும்.

தேடுதலின்போது Google சில YouTube வீடியோக்களையும் வரிசைப்படுத்தும். அந்த YouTube இணையமும் Google லின் சொத்தே. YouTube வீடியோக்களில் முன் விளம்பரங்கள் காண்பிக்கப்படும். அவற்றின் மூலம் Google பெரும் பணம் உழைக்கும்.

1998 ஆம் ஆண்டில் Microsoft மீதும் இவ்வகை வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, Microsoft தண்டிக்கப்பட்டு இருந்தது. தண்டனைக்கு முன் Windows கணனிகளை விற்பனை செய்யும் நிறுவனங்கள் Microsoft அங்கீகரிக்கும் software களை மட்டுமே உள்ளடக்கி விற்பனை செய்யலாம். அவ்வாறே Microsoft நிறுவனம் WordPerfect போன்ற software களை அழித்து தனது Word போன்ற software களை வளர்த்தது.

Google search engine, Google Map, YouTube, Android, Gmail ஆகியன பிரிக்கப்பட்டு, தனி நிறுவனங்கள் ஆக்கப்படவேண்டும் என்று பொதுநல அமைப்புகள் அழுத்துகின்றன.

தனது தரம் காரணமாகவே Google அப்போதிருந்த AltaVista, Yahoo, Lycos போன்ற தேடுதல் இணையங்களை பின்தள்ளியது. தற்போது அது பூதமாக மாறி உள்ளது.

இணையங்கள் மூலமான விளம்பர வருமானத்தின் 59% த்தை Google, Facebook ஆகிய இரண்டு நிறுவனங்களே பெறுகின்றன. அதிலும் 63% Google க்கு கிடைக்கிறது.