MiG-21 வகை யுத்த விமானங்களை கைவிடுகிறது இந்தியா

MiG-21 வகை யுத்த விமானங்களை கைவிடுகிறது இந்தியா

இந்தியா தன் கைவசம் உள்ள MiG-21 (Mikoyan-Gurevich-21) வகை யுத்த விமானங்களை 2025ம் ஆண்டில் சேவையில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளது. மிகையான அளவில் இந்திய MiG-21 விமானங்கள் விபத்துக்களில் சிக்குவதே இந்த தீர்மானத்துக்கு காரணம்.

ஜூலை 28ம் திகதி ஒரு MiG-21 ராஜஸ்தான் மாநிலத்தில் விழுந்து நொறுங்கியதில் 2 விமானப்படையினர் பலியாகி உள்ளனர். 2021ம் ஆண்டில் மட்டும் 6 இவ்வகை இந்தியப்படை விமானங்கள் வீழ்ந்து உள்ளன. இந்தியாவிடம் தற்போது இவ்வகை விமானங்கள் சுமார் 70 உள்ளதாக கூறப்படுகிறது.

2012ம் ஆண்டில் அக்கால பாதுகாப்பு அமைச்சர் தம்மிடம் இருந்த 872 MiG-21 விமானங்களில் அரை பங்கு சுமார் 40 ஆண்டுகளில் வீழ்ந்து நொறுங்கியதாக கூறி இருந்தார்.

MiG-21 வகை யுத்த விமானங்கள் 1959ம் ஆண்டு முதல் 1985ம் ஆண்டு வரையான காலத்தில் சோவியத் யூனியனால் தயாரிக்கப்பட்டன. அப்போது இந்த விமானம் மிக தரமான விமானமாக இருந்தாலும் இந்தியாவில் உள்ளவை மிக பழையன.

1961ம் ஆண்டு சோவியத் MiG-21 கட்டுமான அறிவை இந்தியாவுக்கு வழங்கி இருந்தது. அதனால் பெருமளவு MiG-21 விமானங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டன. ஒரு காலத்தில் இந்தியாவிடம் 1,200 MiG-21 விமானங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் இந்தியா MiG-21 அறிவை அடிப்படையாக கொண்டு தனது யுத்த விமான தயாரிப்பு அறிவை வளர்த்து இருக்கவில்லை.

இந்தியா மட்டுமன்றி சீனாவுக்கும் MiG-21 தயாரிப்பு அறிவை சோவியத் வழங்க இருந்தது. ஆனால் இறுதியில் சோவியத் MiG-21 க்கு உரிய பிரதான ஆவணங்களை சீனாவுக்கு வழங்கி இருக்கவில்லை. அதனால் சீனா தம்மிடம் இருந்த MiG-21 விமானத்தை reverse engineering செய்வதன் மூலம் அறிவை பெற்றது. இதை சீனா J-7 வகை யுத்த விமானமாக 2013ம் ஆண்டு வரை தயாரித்தது. அந்த அறிவை வளர்த்து பின் மேலும் தரமான J-8 வகை விமானங்களை தற்போது தயாரிக்கிறது.

இலங்கை விமான படையிடமும் சில J-7 யுத்த விமானங்கள் உள்ளன.