Purdue Phrama $8 பில்லியன் தண்டம் செலுத்தும்

Purdue Phrama $8 பில்லியன் தண்டம் செலுத்தும்

அமெரிக்காவின் மருந்து தயாரிப்பு நிறுவனமான Purdue Pharma தனது OxyContin மருந்து விற்பனையில் செய்த குற்றங்களை ஏற்று, $8.3 பில்லியன் தண்டம் செலுத்தி, நிறுவனத்தையும் மூட இணங்கி உள்ளது.

OxyContin சில நோயாளிகளின் நோக்களை குறைக்கும் மருந்தாகவே அங்கீகரிக்கப்பட்டு இருந்தது. ஆனால் நோய் எதுவும் இல்லாதோர் பலர் அதை போதையாக பயன்படுத்தி உள்ளனர். அதை அறிந்தும் இலாப நோக்கத்தை மட்டும் கொண்ட Purdue Pharma வைத்தியர்களை ஊக்கிவித்து OxyContin மருந்து விற்பனையை அதிகரித்து உள்ளது. இலாபத்தில் பங்கை பெற்ற வைத்தியர்களும் தேவை அற்றோருக்கும் OxyContin கொள்வனவு செய்ய உதவினார்.

1999 முதல் 2009 ஆம் ஆண்டு வரையான 10 ஆண்டு காலத்தில் OxyContin மூலமான opioid போதை பாதிப்புக்கு அமெரிக்காவில் சுமார் 450,000 பேர் பலியாகி உள்ளனர்.

தண்டத்தை செலுத்த தற்போது போதிய பணம் இல்லாத Purdue Pharma நிறுவனம் அந்த நிறுவனத்தையும், அதன் சொத்துக்களையும் விற்றே தண்டத்தை செலுத்த உள்ளது.

Sacklers என்ற குடும்பத்துக்கு சொந்தமான இந்த தனியார் நிறுவனம் 2008 முதல் 2018 ஆம் ஆண்டு வரையான காலத்தில் $10.7 பில்லியன் பணத்தை Purdue Pharma கணக்கில் இருந்து தமது கணக்குகளுக்கு மாற்றி உள்ளனர். மேற்படி குற்றச்சாட்டுகள் வெளிவந்ததும் Sacklers குடும்பம் Purdue Pharma பணத்தை மறைக்க ஆரம்பித்து உள்ளது.

மேலும் பல வழக்குகள் Purdue Pharma மீதும், Sacklers குடும்பம் மீதும் தொடர்கின்றன. அவை opioid தாக்கத்தால் தமக்கு ஏற்பட்ட சுமார் $2 டிரில்லியன் நட்டத்தை மீட்க முனைகின்றன.

Purdue Pharma 128 ஆண்டுகளுக்கு முன், 1892 ஆம் ஆண்டு, நியூ யார்க்கில் John Purdue Gray, George Frederick Bingham என்ற இரண்டு வைத்தியர்களால் Purdue Frederick Company என ஆரம்பிக்கப்பட்டது.