இறுதி நேரத்தில் கடன் முறிவில் இருந்து தப்பியது அமெரிக்கா

இறுதி நேரத்தில் கடன் முறிவில் இருந்து தப்பியது அமெரிக்கா

தனது கடன்களுக்கு வட்டி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டு இன்று புதன் முறியும் நிலையில் இருந்து அமெரிக்கா இறுதி நேரத்தில் தப்பி உள்ளது. நேற்று செவ்வாய் இரவு காங்கிரஸ் அமெரிக்கா சட்டப்படி பெறக்கூடிய அதிகூடிய கடன் எல்லையை மேலும் $2.5 டிரில்லியனால் அதிகரித்து உள்ளதாலேயே அமெரிக்கா முறிவில் இருந்து தப்பி உள்ளது.

இந்த அதிகரிப்பால் அமெரிக்கா 2023ம் ஆண்டு முடியும்வரை முறிவு நிலைக்கு தள்ளப்படாது இருக்கும்.

கடன் பெறக்கூடிய அளவு அதிகரிக்கப்படாவிடின் டிசம்பர் மாதம் 15ம் திகதியில் பின் அமெரிக்கா வட்டிகளை வழங்க முடியாது இருக்கும் என்று ஏற்கனவே அந்நாட்டின் Treasury Secretary Janet Yellen கூறி இருந்தார்.

இன்றைய அதிகரிப்புடன் அமெரிக்காவின் மொத்த கடன் சுமார் $31 டிரில்லியன் ஆக அதிகரிக்கிறது. அளவுக்கு அதிகமாக கடன் பெற்று செலவு செய்யாது, செலவுகளை குறைக்க வேண்டும் என்று இரண்டு கட்சிகளும் கூறினாலும், ஆட்சிக்கு வந்ததும் இரண்டு கட்சிகளும் கடன் எல்லையை அதிகரித்து வருகின்றன. இந்த கடன்கள் எப்போது, யாரால் அடைக்கப்படும் என்று கூற முடியாது.

1940ம் ஆண்டில் அமெரிக்காவின் கடன் எல்லை $49 பில்லியன் ($0.049 டிரில்லியன்) ஆக மட்டுமே இருந்தது. 1981ம் ஆண்டு இது $1.079 டிரில்லியன் ஆக அதிகரித்தது. பின் 2008ம் ஆண்டு $10.615 டிரில்லியன் ஆக அதிகரித்தது. 2019ம் ஆண்டு $22 டிரில்லியன் ஆக அதிகரித்தது. 2023ம் ஆண்டிலும் இது மேலும் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.