கனடாவில் மீண்டும் சிறுபான்மை லிபரல் ஆட்சி

கனடாவில் மீண்டும் சிறுபான்மை லிபரல் ஆட்சி

இன்று திங்கள் (செப்டம்பர் 20, 2021) இடம்பெற்ற கனடிய தேர்தலில் மீண்டும் லிபரல் கட்சி ஆட்சியை கைப்பற்றுகிறது. தேர்தல் முடிவுகள் தற்போதும் வெளிவந்துகொண்டிருந்தாலும், ஏற்கனவே 155 ஆசனங்களை மட்டும் கொண்டு சிறுபான்மை ஆட்சியை கொண்டுருந்த பிரதமர் ரூடோவின் அரசு மீண்டும் ஒரு சிறுபான்மை அரசையே அமைக்கக்கூடும்.

மொத்தம் 338 ஆசனங்களை கொண்ட பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆட்சியை அமைக்க 170 ஆசனங்கள் தேவையாக இருக்கும் நிலையில் லிபரல் கட்சி, 82% வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், 157 தொகுதிகளில் மட்டுமே முன்னணியில் அல்லது வெற்றி அடையும் நிலையில் உள்ளது.

அடுத்த தேர்தலுக்கு இரண்டு ஆண்டுகள் இருக்கும் நிலையில், கருத்து கணிப்புகள் லிபரலுக்கு பெரும்பான்மை ஆதரவு உள்ளதாக காட்டியிருந்த நிலையில், பிரதமர் ரூடோ பெரும்பான்மை ஆட்சியை அமைக்கும் நோக்கில் தேர்தலுக்கு அழைப்பு விடுத்திருந்தார். ஆனாலும் மீண்டும் ஒரு வலுவற்ற ஆட்சியையே அவர் பெறவுள்ளார். அதேவேளை லிபரல் ஆட்சியில் மீன்வள அமைச்சராக இருந்த Bernadette Jordan இன்றைய தேர்தலில் தோல்வி அடைந்துள்ளார்.

ஆட்சிக்காலம் முடிய மேலும் 2 ஆண்டுகள் இருக்கையில் சுமார் C$610 மில்லியன் செலவில், கரோனா பரவலின் மத்தியில், இந்த தேர்தல் அனாவசியமானது என்று பலர் கூறியிருந்தனர். 2019ம் ஆண்டு இடம்பெற்ற கரோனாவுக்கு முன்னான தேர்தலுக்கு C$502 மில்லியன் மட்டுமே செலவாகி இருந்தது.

இன்றைய தேர்தலில் எதிர் கட்சியான Conservative கட்சி சுமார் 121 ஆசனங்களை பெறுகிறது. கியூபெக் மாநிலத்தில் மட்டும் போட்டியிடும் பிரெஞ்சு கட்சியான BQ கட்சி 31 ஆசனங்களை பெறுகிறது. தொழிலாளரை மையமாக கொண்ட NDP கட்சி 27 ஆசனங்களை பெறுகிறது.

லிபரல் கட்சி தலைவர் பிரதமர் ரூடோ, Conservative கட்சி தலைவர் O’Toole, BQ கட்சி தலைவர் Blanchet, NDP கட்சியின் தலைவர் Jagmeet Singh ஆகியோர் ஏற்கனவே வெற்றி பெற்றுள்ளார்.