கனடாவில் மேலும் 751 பூர்வீக சிறுவர்களின் புதைகுழிகள்

கனடாவில் மேலும் 751 பூர்வீக சிறுவர்களின் புதைகுழிகள்

கனடாவின் சஸ்காச்சுவான் (Saskatchewan) மாநிலத்தில் மேலும் 751 பூர்வீக குடி சிறுவர்களின் அடையாளம் இன்றிய புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. சில கிழமைகளுக்கு முன்னரே கனடாவின் British Columbia மாநிலத்தில் 215 பூர்வீக குடி சிறுவர்களின் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டு இருந்தன.

Saskatchewan புதைகுழிகள் 1899ம் ஆண்டு முதல் 1997ம் ஆண்டு வரை இயங்கிய The Marieval Indian Residential School என்ற பாடசாலை இருந்த பகுதியிலேயே காணப்பட்டு உள்ளன. ஆதிக்குடி மக்களின் சிறுவர்களை பலவந்தமாக பெற்றாரிடம் இருந்து பிரித்து கிறீஸ்தவ, மற்றும் ஐரோப்பிய கொள்கைகளுக்கு ஏற்ப போதிக்கும் இந்த பாடசாலைகளை ரோமன் கத்தோலிக்க சபை இயங்கியிருந்தது.

இந்த புதைகுழிகள் Regina நகருக்கு 140 km தூரம் கிழக்கே உள்ளது. தென்கிழக்கு Saskatchewan மாநில சிறுவர்களும், தென்மேற்கு Manitoba மாநில சிறுவர்களும் இங்கு உள்வாங்கப்பட்டு இருந்தனர்.

அப்பகுதி பூர்வீக மக்கள் ground penetrating ரேடார் கருவிகள் மூலமே இந்த புதைகுழிகளை அடையாளம் கண்டுள்ளனர். சிலர் இந்த புதைகுழிகளில் மரணித்த சிறுவர்களின் அடையாளங்கள் இருந்திருக்கலாம் என்றும், 1960ம் ஆண்டுகளிலேயே அவை அகற்றப்பட்டு இருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.

கனடாவில் சுமார் 130 இவ்வகை பாடசாலைகள் இருந்துள்ளன.