பிரென்ச் சனாதிபதியின் கூட்டணி பெரும்பான்மையை இழக்கிறது

பிரென்ச் சனாதிபதியின் கூட்டணி பெரும்பான்மையை இழக்கிறது

Ensemble என்ற பிரெஞ்சு சனாதிபதி மகிறோனின் (Emmanuel Macron) கூட்டணி ஞாயிறு இடம்பெற்ற தேர்தலில் தனது பெரும்பான்மை பலத்தை இழந்து உள்ளது. பெரும்பாண்மை ஆட்சிக்கு 289 ஆசனங்களை வெல்வது அவசியமாக இருக்கையில், மகிறோனின் கூட்டணி இறுதி கணிப்பில் சுமார் 210 முதல் 250 வரையான ஆசனங்களை மட்டுமே கொண்டிருக்கும்.

தேர்தலுக்கு முன் மகிறோனின் கூட்டணி 300க்கும் அதிகமான ஆசனங்களை கொண்டு இருந்தது. மகிறோனும் இரண்டு மாதங்களுக்கு முன் இடம்பெற்ற தனது சனாதிபதி தேர்தலில் முன்னருடன் ஒப்பிடுகையில் குறைந்த அளவு வாக்குகளையே பெற்று இருந்தார்.

இம்முறை இரண்டாம் இடத்தில் உள்ள Nupes என்ற கூட்டணி 150 முதல் 180 வரையான ஆசனங்களையும், National Rally என்ற கூட்டணி 80 முதல் 100 ஆசனங்களையும் பெறும் என்று கூறப்படுகிறது.

மகிறோனின் பல அமைச்சர்களும் இம்முறை வெற்றி கொள்ளவில்லை. பெரும்பான்மை ஆட்சியை கொண்டிராத மகிறோன் தனது திட்டங்களை நடைமுறை செய்ய முடியாது இருக்கும். உதாரணமாக மகிறோன் தற்போது 62 ஆக இருக்கும் ஓய்வூதிய வயதை 65 ஆக உயர்த்த விரும்பினாலும், அதை செய்ய முடியாது இருக்கும்.

எதிர் காட்சிகள் ஓய்வூதிய வயதை 62 இல் இருந்து 60 ஆக குறைக்கவும், குறைந்த சம்பளத்தை 15% ஆல் அதிகரிக்கவும் விரும்புகின்றன.