வெள்ளையர் கைகளில் இருந்து நழுவும் அமெரிக்க அரசியல்

வெள்ளையர் கைகளில் இருந்து நழுவும் அமெரிக்க அரசியல்

அண்மை காலங்களில் அமெரிக்கா போன்ற மேற்கு நாடுகளில் வெள்ளையர் கைகளில் இருந்து வந்த அரசியல் பதவிகள் மெல்ல வெள்ளையர் அல்லாதோர் கைகளுக்கு செல்ல ஆரம்பித்து உள்ளன. இங்கு வெள்ளையர் சனத்தொகை வேகமாக குறைவதே இதற்கு முதல் காரணம்.

நேற்று செவ்வாய்க்கிழமை அமெரிக்காவின் Massachusetts மாநிலத்து Boston நகரில் இடம்பெற்ற மாநகர முதல்வர் பதவிக்கு Michelle Wu என்ற பெண் தெரிவாகி உள்ளார். இவரின் பெற்றோர் தாய்வானில் இருந்து அமெரிக்கா சென்றவர்கள். சிக்காகோ நகரில் பிறந்த இவர் Harvard Law School நிலையத்தில் படிக்க Boston சென்று இருந்தார்.

கடந்த 199 ஆண்டுகளாக Boston நகரில் வெள்ளை இன ஆண்களே மாநகர முதல்வர் பதவியில் இருந்துள்ளனர். அந்நிலை இம்முறை மாறி உள்ளது. Boston நகரில் 1940ம் ஆண்டில் 96.6% மக்கள் வெள்ளையர்கள், ஆனால் 2017ம் ஆண்டில் அவர்களின் வீதம் 43.9% மட்டுமே. அதேவேளை 0.2% ஆக இருந்த ஆசியர் வீதம் 9.7% ஆக அதிகரித்து உள்ளது.

அதே தினம் Ohio மாநிலத்து Cincinnati நகரத்தில் Aftab Pureval என்ற 39 வயதுடைய இந்திய-திபெத்திய பெற்றோரின் மகன் முதல்வராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவருடன் போட்டியிட்ட 82 வயதுடைய David Mann என்பவர் இந்த மாநகரத்தில் நீண்ட காலம் பணியாற்றியவர். 1950ம் ஆண்டில் இங்கு வெள்ளையர் வீதம் 84.4% ஆகவும், 2019ம் ஆண்டில் 50.7% ஆகவும் இருந்துள்ளது.

அதே தினம் Michigan மாநிலத்து Dearborn நகரில் Abdullah Hammound என்பவர் முதல்வராக தெரிவு செய்யப்பட்டு உள்ளார். இவரின் பெற்றோர் லெபனானில் இருந்து அமெரிக்கா சென்றவர்கள். Gary Woronchak என்ற நீண்ட கால அரசியல்வாதி இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளார். 2000ம் ஆண்டு தரவுப்படி, சுமார் 20 ஆண்டுகளுக்கு முன், இங்கே 61.9% மக்கள் ஆங்கிலம் மட்டும் பேசி உள்ளனர், அதேவேளை 29.3% மக்கள் அரபு மொழி பேசியுள்ளனர்.

அதேவேளை பல கருப்பு இனத்தவரும் நகர முதல்வர் பதவிகளை வென்றுள்ளனர். Pittsburgh நகரம் Ed Gainey என்ற முதல் கருப்பு இன முதல்வரை தெரிவு செய்துள்ளது. நியூ யார்க் நகரம் Eric Adams என்ற கருப்பு இனத்தவரை முதல்வராக தெரிவு செய்துள்ளது. இவர் நியூ யார்க் நகரின் இரண்டாவது கருப்பு இன முதல்வர்.