அக்டோபர் 18க்கு பின் அமெரிக்க அரசிடம் பணமிருக்காது

அக்டோபர் 18க்கு பின் அமெரிக்க அரசிடம் பணமிருக்காது

வரும் அக்டோபர் மாதம் 18ம் திகதிக்கு பின் அமெரிக்க மத்திய அரசிடம் பண இன்றிய நிலை உருவாகும் என்று அமெரிக்காவின் திறைசேரி செயலாளர் (Treasury Secretary) Janet Yellen இன்று செவ்வாய் கூறியுள்ளார். அமெரிக்க காங்கிரஸ் அமெரிக்கா பெறக்கூடிய உச்ச கடன் தொகையை அதிகரித்தால் மட்டுமே, மேலதிக கடன் பெற்று பணம் இல்லாது போகும் நிலையை தவிர்க்கலாம் என்றும் Yellen கூறியுள்ளார்.

அமெரிக்க சட்டப்படி காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளும் தொகைக்கு (debt ceiling) மேலாக கடன் பெற முடியாது. அமெரிக்காவின் தற்போதைய கடன் ஏற்கனவே அத்தொகையை அடைந்துள்ளது. அதனால் காங்கிரஸ் debt ceiling கை மேலும் அதிகரித்தால் மட்டுமே அமெரிக்கா மேலதிக கடனை bond வழங்கல் போன்ற முறைகள் மூலம் பெறலாம்.

Debt ceiling கை அதிகரிக்காவிடின், குறைந்தது debt ceiling சட்டத்தை சில காலம் இடைநிறுத்தல் அவசியம். கடந்த ஆகஸ்ட் வரையான 2 ஆண்டு காலமாக debt ceiling இடைநிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

ஆனால் பைடென் கட்சிக்கு எதிரான Repulican கட்சியின் காங்கிரஸ் உறுப்பினர்கள் debt ceiling கை அதிகரிப்பதை எதிர்த்து வருகின்றனர்.

அமெரிக்க அரசிடம் பணம் இன்றிய நிலை உருவானால் அங்கு அரச ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத நிலை உருவாகும். அரசின் கொள்வனவுகளும் நிறுத்தப்படும். அத்துடன் பொருளாதாரம் முறியும். இந்நிலையை தவிர்க்க இறுதியில் காங்கிரஸ் இறுதி நேரத்தில் debt ceiling கை உயர்த்தும் அல்லது இடைநிறுத்தம் செய்யும். ஆனாலும் இவை தற்காலிக திருத்தங்கள் மட்டுமே.

அக்டோபர் 18 கணிப்பு ஒரு பருமட்டான கணிப்பு மட்டுமே. அரசுக்கான வருமானம் பல காரணிகளால் மாறுபடும். வருமான வரி, இறக்குமதி வரி போன்ற பல காரணிகள் வருமானத்தை தீர்மானிக்கும்.

நவம்பர் மாதம் 1ம் திகதி அமெரிக்க அரசின் கடனுக்கு $14 பில்லியன் வட்டி செலுத்தவேண்டும். இவ்வகை கடப்பாடுகளுக்கு செலுத்த பணம் இல்லாவிடின் அரசு முறியும்.