அமெரிக்காவை கைவிட்டது பிலிப்பீன்ஸ்

Philippines

ஆசியாவில் நீண்ட காலமாக அமெரிக்காவின் தளமாக இயங்கி வந்த பிலிப்பீன்ஸ் இப்போது அமெரிக்காவை கைவிட்டு, பதிலாக சீனாவின் நட்பு நாடாகி உள்ளது. இன்று வியாழன் சீனா சென்றுள்ள பிலிப்பீன்ஸ் ஜனாதிபதி இந்த உண்மையை அங்கு வெளிப்படுத்தி உள்ளார். இவருடன் சுமார் 200 பிலிப்பீன்ஸ் வர்த்தகர்கள் சீனா சென்றுள்ளனர்.
.
ஸ்பானிஸ்-அமெரிக்கன் யுத்த காலத்தில் இருந்து அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த பிலிப்பீன்ஸ், இரண்டாம் உலக யுத்தத்தின் போது ஜப்பானால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. இரண்டாம் உலக போரின் பின் சுதந்திரம் அடைந்த பிலிப்பீன்ஸ் தொடர்ந்தும் அமெரிக்காவின் நட்பு நாடாகவே இருந்து வந்துள்ளது.
.
ஆனால் அண்மையில் ஆட்சிக்கு வந்த பிலிப்பீன்ஸ் ஜனாதிபதி Rodrigo Duterte தனது நாடு அமெரிக்க உறவை கைவிட்டதை தெரிவித்து உள்ளார். இவர் சீனாவில் வழங்கிய தனது உரை ஒன்றில் “I announce my separation from the United States” என்றுள்ளார்.
.
சீனாவின் வளர்ச்சிக்கு பதிலாக ஆசியாவில் ஆளுமையை வளர்க்க அமெரிக்கா பிலிப்பீன்ஸ் உட்பட பல நாடுகளில் படைகளை வைத்துள்ளது. அத்துடன் தென் சீன கடல் விவகாரம் போன்றவற்றிலும் தன்னை ஈடுபடுத்த முனைந்து வந்துள்ளது. ஆனால் சீனா ஒவ்வொரு ஆசிய நாட்டுடனும் தனித்தனியே பேச முன்வந்து இருந்தது. பிலிப்பீன்ஸ் இப்போது சீனாவின் வழி சென்றுள்ளது. அது அமெரிக்காவுக்கு பெரும் இழப்பாகும்.
.
பிலிப்பீன்ஸ் ஜனாதிபதி அண்மையில் ஒபாமாவை ஒரு விபச்சாரியின் மகன் என்றும் கூறியிருந்தார். அத்துடன் அவர் ஒபாமாவை நரகத்து போகும்படியும் கூறியிருந்தார் (go to hell).
.
தற்போது சிறிதளவு அமெரிக்க படையினர் பிலிப்பீன்ஸ் தளங்களில் இருந்தாலும் அவர்கள் பிலிப்பீன்சின் நன்மைக்கு அல்லாது, அமெரிக்காவின் நன்மைக்கே தங்கி உள்ளனர் என்றுள்ளார் பிலிப்பீன்ஸ் ஜனாதிபதி. மேலும் சுமார் இரண்டு மாதங்கள் மட்டுமே ஆட்சியில் இருக்கப்போகும் ஒபாமா இவ்விடயத்தை அடுத்த ஜனாதிபதி கைக்கு விடக்கூடும்.

.