அமெரிக்கா-தலிபான் யுத்தநிறுத்த உடன்படிக்கை

 Afhanistan
அமெரிக்காவும், ஆப்கானிஸ்தானின் தலிபானும் நிரந்தர யுத்தநிறுத்த ஒப்பந்தம் ஒன்றில் கையொப்பம் இட்டுள்ளனர். கட்டாரில் இடம்பெற்ற இந்த ஒப்பந்தம் இவர்களுக்கு இடையே 18 வருட காலமாக இடம்பெற்றுவந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும்.
.
அமெரிக்கா தரப்பில் Zalmay Khalilzad என்பவரும், தலிபான் தரப்பில் Mullah Abdul Ghani Baradar என்பவரும் இன்று 29 ஆம் திகதி ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டுள்ளனர்.
.
இந்த இணக்கம் அமெரிக்காவுக்கும், தலிபானுக்கும் இடையிலானது மட்டுமே. ஆப்கானிஸ்தான் அரசு இந்த இணக்கத்தில் அங்கம் இல்லை. அரசும், தலிபானும் பின்னர் நேரடியாக பேசுவர்.
.
ஒப்பந்தம் இணங்கியபடி நடைமுறை செய்யப்படின், அமெரிக்க மற்றும் NATO படையினர் ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் 14 மாதங்களுள் முற்றாக வெளியேறுவர். முதல் 135 நாட்களுள் அங்குள்ள அமெரிக்க படைகளின் எண்ணிக்கை 8,600 ஆக குறையும். ஆப்கான் அரசு சிறைகளில் உள்ள 5,000 தலிபான்களை விடுதலை செய்யும். தம்மிடம் உள்ள 1,000 ஆப்கான் படையினரை தலிபானும் விடுதலை செய்யும்.
.
ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டுள்ள அல்கைதா அமெரிக்காவில் நடாத்திய 9/11 தாக்குதலை தொடர்ந்து அமெரிக்கா ஆப்கானித்தானில் யுத்தத்தை ஆரம்பித்து இருந்தது. இதுவரை சுமார் 2,400 அமெரிக்க படையினர் ஆப்கானிஸ்தானில் பலியாகி இருந்தனர். தற்போது அங்கு சுமார் 12,000 அமெரிக்க படையினர் நிலைகொண்டு உள்ளனர்.
.
2011 ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா தலிபானுடன் பேச்சுவார்த்தை செய்ய முனைந்து வந்துள்ளது. கட்டார் (Qatar) அரசு அதற்கு உதவி வந்துள்ளது.
.
தான் பதவிக்கு வந்தால் ஆப்கானித்தானில் உள்ள அமெரிக்க படையினரை திருப்பி அழைப்பேன் என்று ரம்ப் கூறி இருந்தார். வரும் நவம்பர் மாதம் மீண்டும் சனாதிபதி தேர்தல் இடம்பெற உள்ளதால் ரம்ப் தேர்தலை கருத்தில் கொண்டே தலிபானுடன் அவசர இணக்கத்தில் ஈடுபட்டு உள்ளார்.
.