அமெரிக்க அலபாமா மாநிலத்தில் மீண்டும் யோகா

அமெரிக்க அலபாமா மாநிலத்தில் மீண்டும் யோகா

அமெரிக்காவின் அலபாமா (Alabama) மாநில பாடசாலை மாணவர்களுக்கு யோகா பயிற்சி வழங்கல் மீதான தடை விரைவில் நிறுத்தப்படவுள்ளது. 1993ம் ஆண்டு முதல் அலபாமா பாடசாலைகளில் யோகா பயிற்சி வழங்குவது தடை செய்யப்பட்டு இருந்தது. இந்த தடையை நீக்க அந்த மாநில House of Representative சபைக்கு வந்த சரத்து 73 வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளது. ஆனாலும் 25 உறுப்பினர் எதிர்த்து வாக்களித்து உள்ளனர்.

யோகா பயிற்சி கிறிஸ்தவ நம்பிக்கைக்கு எதிரானது என்றும், இந்து மத அடிப்படைகளை கொண்டது என்றும் கருதிய கடும்போக்காளர் 1993ம் ஆண்டு Alabama Board of Education பாடசாலைகளில் யோகா பயிற்சி வழங்குவதை தடை செய்து இருந்தனர்.

Jeremy Gray என்ற உறுப்பினரின் முயற்சியிலேயே யோகா மீதான தடை நீக்கப்படவுள்ளது. Gray 2019ம் ஆண்டு முதல் இந்த முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

ஆனாலும் 1993ம் ஆண்டு தடைகளின் சில பகுதிகள் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும். குறிப்பாக யோகா பயிற்சியின்போது நமஸ்தே என்று வடமொழியில் வணக்கம் கூறுவது தொடர்ந்தும் தடை செய்யப்பட்டு இருக்கும்.

அதேவேளை Alabama Citizens Action Program என்ற கிறீஸ்தவ தேவாலய அமைப்பு தடை நீக்கலை எதிர்த்து வழக்கு தொடரவுள்ளது.

2017ம் ஆண்டில் சுமார் 14% அமெரிக்கர் யோகா பயிற்சியில் ஈடுபட்டு உள்ளதாக அமெரிக்காவின் CDC (Centers for Disease Control and Prevention) கூறியுள்ளது.