அஸ்ரேலியாவை  சீனா மேலும் நெருக்க, பிரதமர் குமுறுகிறார்

China_Australia

கடந்த சில கிழமைகளாக சீனாவுக்கும், அஸ்ரேலியாவுக்கும் இடையில் அரசியல் முறுகல் நிலை உக்கிரம் அடைந்து வருகிறது.  அஸ்ரேலிய பிரதமர் திடீரென அமெரிக்க சனாதிபதி பக்கம் சாய, சீனா  அஸ்ரேலியாவை தண்டிக்க ஆரம்பித்து உள்ளது.
.
இன்று வியாழன் மீண்டும்  அஸ்ரேலியா செல்லும் சீன மாணவர்களுக்கும், உல்லாச பயணிகளுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது சீனா.  அஸ்ரேலியாவில் சீனர்களுக்கும், ஏனைய ஆசியர்களுக்கும் எதிராக வன்முறைகள் அதிகரித்து உள்ளன என்றுள்ளது சீனாவின் எச்சரிக்கை.
.
சீனா கூறியது போல் சில சம்பவங்கள் அஸ்ரேலியாவில் இடம்பெற்றாலும், சீனா அதை மிகைப்படுத்துகிறது என்று குமுறுகிறது  அஸ்ரேலியா. அங்கு அண்மையில் இரண்டு வியட்னாம் சகோதரிகள் மீது வெள்ளை இன பெண் ஒருவர் தாக்குதலுக்கு முனைந்தது CCTV ஒன்றில் பதிவாகி உள்ளது.
.
உறவை நலப்படுத்த கடந்த சில தினங்களாக அஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் சீன வெளியுறவு அமைச்சரை சந்திக்க முனைந்தும் வருகிறார். ஆனால் சீன வெளியுறவு அமைச்சர் அந்த அழைப்புக்கு செவிமடுக்காது உள்ளார்.
.
அஸ்ரேலியாவின் 4 ஆவது பெரிய அந்நியசெலவாணி அங்கு படிக்கவரும் வெளிநாட்டு மாணவர்களிடம் இருந்து கிடைக்கிறது. அதில் சீன மாணவர்கள் பெரும் பங்கை கொண்டுள்ளனர். வருடம் ஒன்றில் சுமார் U$ 26 பில்லியனை அஸ்ரேலியா வெளிநாட்டு மாணவர்களிடம் இருந்து பெறுகிறது.
.
அஸ்ரேலியாவின் இறைச்சி, பால், பால்மா, கணிப்பொருட்கள் எல்லாம் பெருமளவில் சீனாவாலேயே கொள்வனவு செய்யப்படுகிறது. அவற்றுக்கும் சீனா தற்போது பெரும் இறக்குமதி வரி விதித்துள்ளது. இப்பொருட்களை அமெரிக்காவோ அல்லது ஏனைய மேற்கு நாடுகளோ கொள்வனவு செய்யப்போவது இல்லை. சீனாவே அஸ்ரேலியாவின் முதலாவது பெரிய வர்த்தக கூட்டு நாடு. இரண்டு நாடுகளுக்கும் இடையிலான ஓராண்டு வர்த்தகத்தின் பெறுமதி சுமார் U$160 பில்லியன் என்று கூறப்படுகிறது.
.
அஸ்ரேலியாவை G7 உடன் இணைக்க ரம்ப் ஆசை காட்டி இருந்தாலும், அந்த முயற்சியும் தற்போது கைவிடப்பட்டு உள்ளது.
.
ரம்பின் விருப்பத்துக்கு அமைய அஸ்ரேலியா ஏற்கனவே சீனாவின் Huawei நிறுவனம் 5G தொலைத்தொடர்பு கட்டமைப்பில் ஈடுபடுவதை விலக்கி இருந்தது.
.